தன்னறம் நூல்வெளி

குளக்கரைகளில் இளைப்பாறும் வரலாறு

புத்தக வெளியீட்டு நிகழ்வு

மேற்குமலைத்தொடர்ச்சியின் விரிந்துநிற்கும் அந்தப் பெருமலையின் அடிவாரத்தில் முளைத்துநிறைந்த அடர்காட்டுக்குள் அமைந்திருக்கிறது அக்கிணறு. இப்போது வேண்டுமானால் மண்பாதைகளும் சென்றடையும் வழிகளும் வந்துவிட்டிருக்கலாம். ஆனால், காலத்தின் நூறாண்டுகளுக்கு முன்பு, எத்தனையோ இடர்களைத் தாண்டியும் யாரோ ஒரு மனிதன் அந்தக் கிணற்றை அங்கு வெட்டியிருக்கிறார். அவ்வளவு கட்டுமான நேர்த்தியோடும் வடிவின் நிறைவழகோடும் ஆழப்பட்டிருக்கும் அந்தக் கிணறு, இன்றைக்கு நீரற்று தூர்ந்த நிலையிலிருக்கிறது. சொட்டுத்தண்ணீரைக்கூட கிணற்றின் சுனையில் சுரக்கவில்லை.

இதற்கு என்ன காரணமென உள்ளெண்ணிப் பார்த்தால், ஏதோவொருவகையில் நம் ஆழ்மனதின் புறவுலக வெளிப்பாடுதான் அது. நம்மில் வற்றிப்போன ஒரு அகச்சுரப்பு காய்ந்துபோனதன் அடையாளம் அது! கருமலைக் கிணற்றின் சுனைக்கண் மீண்டும் திறப்பதற்காக… கர்நாடக மாநிலம் மேல்கோட்டையில் சிற்றளவிலான ஒரு மலையைச்சுற்றி, முந்தைய தலைமுறை மனிதர்களால் தோண்டப்பட்டு இன்றளவும் நீருயிர்த்திருக்கும் நூற்றியெட்டு குளங்களின் சுனைநீரைக் கொண்டுவந்து… எல்லோர் கைகளிலும் தந்து தண்ணீருக்கான ஒரு பிரார்த்தனையோடு கருமலைக்கிணற்றின் ஆழத்துக்குள் ஒவ்வொரு கரங்களாக ஊற்ற… ‘குளக்கரைகளில் இளைப்பாறும் வரலாறு’ புத்தக வெளியீட்டு நிகழ்வு துவங்கியது.

நெஞ்சுமுழுக்க நிறைவையும், இன்னும் கூடுதல் பொறுப்புகளைச் சுமந்தாகவேண்டும் என்கிற நம்பிக்கையையும் இந்நிகழ்வு தந்திருக்கிறது. வெளியுலகுக்கான எவ்வித விளம்பர வெளிப்பாடுகளுமின்றி, எண்பது வாரங்கள் தொடர்ச்சியாக காலைநேரங்களில் பனைவிதைகளை விதைத்தும், வாராவாரம் நண்பர்கள்கூட சூழல்காப்பு களப்பணிகளை முன்னெடுத்தும் செயலாற்றுகிற ‘கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு’ என்பது, என்னைப் பொறுத்தவரையில் செயல்நீருக்கான மனிதச்சுனைதான்.

கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளோடு தாய்களும், முதுமை கொண்டவர்களும் நாடிவந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் இந்த ஒன்றுகூடல் தன்னளவில் ஒளிபொருந்தியது என்பது காலநிஜம். அதன் உள்ளார்ந்த சத்தியம் எள்ளளவும் அப்பழுக்கற்றது. இவர்களின் அறப்பணியும், ஆழ்ந்த பற்றும்… எங்களுடைய மனசாட்சியை கணத்துக்குகணம் உலுக்கியது. அது எங்களை நோக்கி நிறைய அகக்கேள்விகளைக் கேட்டது. செயல்படுதலின் தீவிரத்துக்குள் நாங்கள் இன்னும் உண்மையுற வேண்டுமென்கிற தீர்க்கத்தை மனதுக்கு வழங்கியது.

இந்தப் புத்தகம் வெளிவருதலுக்கான மிகமுக்கிய ஆதாரம் ரவீந்திரன் சார். கருவை உருப்படுத்தியது அவரே. தமிழின் நிலைவாசல் வழியாக இந்தியக் குளக்கட்டுமான வரலாற்றை உயிரீரத்தோடு மொழிப்படுத்திய பிரதீப் பாலு, மேல்கோட்டை குளங்களின் நீரள்ளிவந்த கெளசிக், நிகழ்வுக்கு துணைநின்ற பொன்முத்து, ஜான்சுந்தர் அண்ணன், வந்திருந்த அனைவருக்கும் உணவு தயாரித்து அளித்த பிரகாஷ் அண்ணன் மற்றும் அவரது குடும்பத்தார், இந்நிகழ்வுக்கான ஒட்டுமொத்த செய்கைக்கும் உறுதுணையாயிருந்த குமார் சண்முகம்… என அத்தனை தோழமைகளின் உடனிருப்போடும் சொற்பகிர்தலோடும் கடந்தது நிகழ்வு.

அந்தக் கிணற்றருகே உள்ள சின்னதொரு கோவிலில், விடியக்காலையிலேயே திண்டுக்கலில் இருந்து கிளம்பிவந்து கடவுளுக்குப் படையல்வைத்து வணங்கிய, ஒரு எளிய குடும்பத்தின் பெண்மக்கள் இட்டக் குலவைச்சத்தம் தான் இந்நிகழ்வின் துவக்கக்குரலாக மலையொலித்தது. நிகழ்வுக்காக வந்திருந்த குழந்தைகளின் கைகளில் தும்பி இதழையும், பெரியவர்களிடம் தன்னறத்தின் சில புத்தகங்களைக் கைசேர்த்தது பிரியத்தின் நிழலாக மனதிலசைகிறது.

நிச்சயமாகச் சொல்கிறோம்! நாம் எல்லோரும் இதேயிடத்துக்கு மீண்டும் திரும்பி வருவோம். சிறிது நாட்களில், நம்மை ஒரு தகவல் வந்தடையும். அந்த செய்தி என்னவாக இருக்குமென்றால்… கருமலைக்கிணற்றின் சுனை கண்திறந்து தண்ணீர் மேலேறி நின்றுள்ளது என்பதுதான். யார்யாரெல்லாம் நீரைத் தொழுகிறோமே அவர்களெல்லாம் இங்குவந்து நிச்சயம் அந்நாளில் கூடுவோம். இது மிகைநம்பிக்கை கிடையாது. பூமியுயிர்களை ஈன்றுப்புறந்தள்ளிய இந்த இயற்கையின் கருணைமீதான அகநம்பிக்கை. நினைவில் நீருள்ள மனிதன் ஒருபோதும் துயருருவதில்லை.

Like what you read? Share The Post with Friends and Family.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments