இயற்கையை அறிதல்

150.00

Description

“எறும்புகளின் வாழ்க்கைப் பழக்கங்கள் எறும்புகளை மட்டும் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்க்கும்போது எவ்வகையிலும் முக்கியமல்ல. ஆனால் அதிலிருந்து தொடர்பின் கதிர் ஒன்று வந்து மனிதனை தீண்டும்போது அந்தச் சின்னஞ்சிறு உயிர் ஒரு குறியீடாக, ஒரு அளவீடாக. மாறிவிடுகிறது. அதன் சின்னஞ்சிறு உலகம், அதன் உழைப்பு முதலியவை உன்னதமாக கணிக்கப்படுகின்றன. அது தூங்குவதேயில்லை என்ற சமீபத்திய கண்டுபிடிப்பு வியப்யையும் ஆர்வத்தையும் மட்டுமல்ல, மிக உயர்ந்த ஒரு மன எழுச்சியையே நம்மில் உருவாக்குகிறது. காட்சி வடிவங்களுக்கும் மனித சிந்தனைக்கும் இடையேயான இந்த உறவின் காரணமாகவே பழங்குடிகள் உருவங்கள் மூலம் உரையாடுகிறார்கள். வரலாற்றில் நாம் பின்னோக்கி நகரும்தோறும் மொழி மேன்மேலும் சித்திரத்தன்மை கொண்டதாக ஆகிறது. அதன் குழந்தைப்பருவத்தில் அது முழுக்க கவிதைதான்.

அதாவது எல்லா ஆன்மிக விஷயங்களும் அன்று நேரடியாக இயற்கைக் குறியீடுகள் மூலம் பகிரப்பட்டன. அக்குறியீடுகள்தாம் எல்லா மொழிகளிலும் ஆதாரக்கூறுகளாக இன்றும் காணப்படுகின்றன. எல்லா மொழிகளிலும் வழக்காறுகளும் சொலவடைகளும் மிகுந்த நாவன்மையுடன் பிணைக்கப்படும்போதுதான் உச்சகட்ட வெளிப்பாடு சாத்தியமாகிறது என்பதும் கவனிக்கப்பட்டுள்ளது. அதாவது இயற்கைக் குறியீடுகளே முதல் அடிப்படை, அவையே இறுதியானவையும்கூட. இயற்கையின் மீதான மொழியின் இந்த வேர்ப்பற்று, வெளியிலுள்ள விஷயங்களை மனித அகத்தின் வெளிப்பாடுகளாக மாற்றிக்கொள்ளும் இந்த இயல்பு, ஒருபோதும் நம் மனதை பாதிக்காமல் போவதில்லை. இந்த அம்சமே ஒரு கிராமத்து விவசாயியோ பழங்குடி மனிதனோ பேசும்போது எல்லா மனிதர்களையும் கவரக்கூடிய கூர்மையையும் ஆழத்தையும் அப்பேச்சுக்கு அளிக்கிறது.”
~
எழுத்து, சொற்பொழிவு என்ற இரு படைப்பாக்க நிலைகளிலும் உலகிற் சிறந்த படைப்புவாதிகளுள் ஒருவராக அறியப்படுகிற எமர்சன் அவர்கள் இயற்கையைப் பற்றி எழுதிய நெடுங்கட்டுரையின் ஒரு அத்தியாயம் இவ்வாறு எடுத்துரைக்கிறது. தனிமனித அகத்தின் ஆழ்நிலைகளை முன்னிலைப்படுத்திய முன்னறிவு கொண்டவராக எமர்சன் இன்று உலகறியப்படுகிறார். ‘பிரபஞ்சம் என்பது இயற்கை மற்றும் ஆன்மாவின் தொகுப்பு’ என தன்னுடைய தத்துவத்தளத்தை விஸ்தரித்துக் கொண்ட எமர்சன் இறுகிய மெய்யியல் கோட்பாடுகள் எதையுமே ஏற்காதவர். எமர்சனிடம், அவருடைய சிந்தனையின் மையம் என்ன என்று கேட்டபோது அவர், “தனிமனிதன் எல்லையற்ற தன்மையினன் என்பதே எனது மையக் கொள்கை” என்றுரைத்தார்.

1836ம் ஆண்டில் ‘இயற்கை’ என்னும் தலைப்பில் புகழ்மிக்க ஒரு கட்டுரையை அவர் வெளியிட்டார். இக்கட்டுரை சுமந்திருக்கும் உள்ளடக்கச் செறிவும், அகவிடுதலை முழக்கமும் இன்றுவரை வியக்கப்படக்கூடிய ஒன்றாக உள்ளது. வரிக்கு வரி மேலும் மேலும் கூர்மை கொண்டு வாசிப்பவரின் அகத்தில் இயற்கையைப் பற்றிய தன்னுணர்தலையும் தெளிவினையும் தத்துவநோக்கில் உண்டாக்கும் படைப்பு என்றும் இதைச் சொல்லலாம். உண்மையில் எமர்சனின் எழுத்துவளமும், கருத்துவளமும் ஒருசேர இதில் வெளிப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலக்கியம் மற்றும் தத்துவப்பரப்பில் பெரும் அலையை உருவாக்கியது இக்கட்டுரை.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் பல ஆண்டுகள் முன்பு தமிழில் மொழிபெயர்க்கப்ட்ட இக்கட்டுரை ‘இயற்கையை அறிதல்’ என்னும் அதே தலைப்பில், தன்னறம் நூல்வெளி வாயிலாக தற்போது வெளியீடு கொள்கிறது. இந்நூலை வடிவமைத்து அச்சாக்கும் வாய்ப்பு அமைந்ததில் எல்லையற்ற மகிழ்வு கொள்கிறோம். ஒவ்வொரு தனிமனித அகக்குரலும் சம அளவு பிரபஞ்சத்தகுதி உடையவை; ஆன்ம நிலையில் எல்லாவுமே ஏற்றத்தாழ்வுகளற்றது என்பதனையும், தனிமனித மனம் இயற்கையை அணுகும் தரிசனத்தை தனிமை, நுகர்வு, அழகு, மொழி, கட்டுப்பாடு, கருத்துமுதல் வாதம், ஆத்மா, சாத்தியக்கூறுகள் என்னும் எட்டு உபதலைப்புகளின் வழியாக விவரித்துரைக்கிறது இந்நூல்.

தன் உள்ளடக்கத்தின் கட்டுமானத்தாலும், அதன் அர்த்த ஆழச்செறிவினாலும் நம்மை நோக்கி ஓர் அறைகூவலை எழுப்பும் ஒவ்வொரு படைப்பும், நம்முடைய அகவிடுதலையை வார்த்து சீர்திருத்துகிறது. அவ்வகையில், தமிழில் நிகழ்ந்த முக்கியமான மொழிபெயர்ப்பில் இக்கட்டுரையும் தனிச்சிறப்பு கொள்கிறது. ஒவ்வொரு வாசக மனதும் அவசியம் வாசித்து விவாதிக்க வேண்டிய நற்படைப்பு இது.

Related Books

ஷோபாசக்தி-தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் நேர்காணல்

280.00

முகுந்த் நாகராஜன் கவிதைகள்

480.00

கல் தனிமை

270.00

கத்தி வீசுபவர்

290.00