வாழ்க்கை பாதையை மாற்றியமைத்த புத்தகம்….

“ஒற்றை தானியம் என்பது ஒரு பிரபஞ்சம். ஒளி, நீர், காற்று, வெப்பம், வெளி, இருள் என இயற்கையின் அடிப்படைக்கூறுகள் அத்தனையும் ஒரு தானியத்துக்குள் திரள்கிறது. ஒன்றுமற்ற புள்ளியாக இருந்து, எல்லாம் நிறைந்ததாக ஒரு தானியமணி இருப்படைதலுக்குப் பின்னணியில் ஒரு பெரும் பயணப்பாதை இருக்கிறது. பேரியற்கையின் அறுந்துவிடாத நீள்கண்ணி, சிறுவிதை வரைக்கும் தொடர்ந்து உயிர்வாழ்க்கையை பேரற்புதமாக மாற்றுகிறது.

இந்த உள்ளார்ந்த உண்மையை உணர்ந்துகொண்டால், உலகில் எவ்வுயிருமே போராலும் பசியாலும் பிணியாலும் துயரமடையாது. பிரபஞ்சத்தின் லயத்தோடு ஒத்திசைந்து பூமிக்குள் மனித வாழ்வை தொடர்வதும், அதற்கான நன்றியை செயலாக பரிணமிக்கச் செய்வதுமே ஞானத்தின் திறவுவாசல்”

சத்தியத்தின் இவ்வார்த்தைகளை உட்சுமந்து, எண்ணற்ற மனிதர்களின் கண்ணோட்டத்தையும் வாழ்க்கை பாதையையும் மாற்றியமைத்த புத்தகம் மசானபு புகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு முதற்பதிப்பாக பூவுலகின் நண்பர்கள் வாயிலாக வெளிவந்த ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகத்தை எளிய திருத்தங்களுடன் புதிய வெளியீடாக தன்னறம் நூல்வெளி மற்றும் பூவுலகின் நண்பர்கள் இணைந்து வெளியிடுகிறோம். இச்சமயத்தில், முந்தைய காலகட்டங்களில் இப்புத்தகத்தை அனைத்துத் தளங்களிலும் பதிப்பித்து கொண்டுசேர்த்த எல்லா தோழமைகளையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.

மசானபு ஃபுகோகா, இந்தியா வந்திருந்தபோது பிரதம மந்திரி அலுவலகம் கொடுத்த அரசு விருந்தில் கலந்துகொண்டு உணவருந்திவிட்டு அறைக்குத் திரும்பிவிடுகிறார். அன்று மாலை நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்,”இவ்வேளாண்முறை சிறிய நாடுகளுக்கு ஒத்துவரலாம். ஆனால், இந்தியா போன்ற பரந்த தேசத்திற்குப் பொருந்தாது” என்கிறார் அன்றைய பிரதமர்.

மறுநாள், கடுமையான காய்ச்சலால் பாதிப்படைந்திருந்த புகோகாவிடம் நண்பர்கள் உடல்நலம் விசாரித்த போது,”ஆமாம். இது நான் செய்த தவறால் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதிகார பலத்தால் ஏதாவது நன்மை சாத்தியப்படும் என நினைத்து அங்குசென்று உணவருந்தியது என் தவறுதான். அன்பால்தான் அனைத்தும் சாத்தியப்படும். இதைப் புரிய வைப்பதற்காகவே இந்தச் சிறு வாதையை இயற்கை எனக்குத் தந்திருக்கிறது. நான் மருந்து எடுத்துகொள்ளப் போவதில்லை” எனச்சொல்லி உண்ணா நோன்பிருக்கிறார் ஃபுகோகா.

சமகாலத்தில் சர்வதேச அரசமைப்புகள் பலவீனமடைந்து, அதன் அதிகாரக் கொள்கைகள் பிடிப்பிழந்து வீழ்ந்திருப்பது, ‘இயற்கைக்குத் திரும்புதல்’ எனும் அவரின் அனுபவ வாழ்முறை, உலகம் முழுமைக்குமான தீர்வாக இருப்பதை அறியமுடிகிறது. இளைய தலைமுறை கருத்தாக்கங்கள் இந்த அடிமண்ணிலிருந்தே முளைக்கத் துவங்கியிருக்கிறது.

ஃபுகோகா, இவ்வேளாண்முறைக்குள் தன்னை முழுமையாக ஆட்படுத்திக்கொள்ள தனது நிலத்திற்கு வந்துசேர்ந்த நாளின் முதற்விடியலை மனதிலேந்தி, இயற்கையின் மாறாத தத்துவத்தில் வேர்விட்டு நிற்கும் இந்நூலை அனைவரிடத்தும் கொண்டுசேர்ப்போம். மாறுதலுக்கான வாசல் எக்காலத்தும் திறந்தேயிருக்கிறது.

தொடர்புக்கு :

தன்னறம்
9843870059
thannarame@gmail.com

Like what you read? Share The Post with Friends and Family.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments