புத்தகம் தன்னுரு அடைந்திருக்கிறது
“நாங்கள் அறிந்தவரை, இந்த பூமி மனிதனுக்கு சொந்தமானதல்ல; மனிதன் பூமியின் உடமை. நம் எல்லோரையும் பிணைக்கும் ரத்தம் போலவே இந்த பூமியில் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று. இந்த வாழ்க்கையின் உயிர்க்கூட்டை நெய்தவன் மனிதனல்லன். மனிதன் இந்த பூமியின் உயிரிகளில் ஒரு இழை மாத்திரமே. இந்த பூமிக்கு மனிதன் இழைக்கும் ஒவ்வொரு செயலையும் அவன் தனக்கேதான் இழைத்துக் கொள்கிறான்.”
– செவ்விந்திய சமூகத் தலைவன் ஸீயாட்டீல் 1852ல் எழுதியது
“இயந்திரங்களை விட மனிதத்தன்மையே நமக்கு தேவை. அறிவாளித்தனத்தை விட அன்பும் எளிமையுமே நமக்குத் தேவை. இந்த குணங்கள் இல்லாமல் போனால் வாழ்க்கை வன்முறை நிறைந்ததாகவும்… அனைத்தையும் தொலைப்பதாகவும் ஆகிவிடும்…”
– ‘தி கிரேட் டிக்டேட்டர்’ திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் சார்லி சாப்ளின் பேசும் உரை
அன்பை நோக்கி கரம்நீட்டிய சார்லி சாப்ளின் மற்றும் இயற்கையை கைகூப்பிய செவ்விந்தியத் தலைவன் ஸீயாட்டில் இவர்கள் இருவரின் சொற்களின் சாராம்சத்தை உரையாகத் தொகுத்த புத்தகமாக… ‘இருதயத்தை நோக்கி இரு உரைகள்’ தன்னறம் நூல்வெளியின் அச்சுப்பதிப்பிலிருந்து வெளியீடு அடைகிறது.
மானுடத்தின் அடிப்படை உயிரியல்பான கருணையை அகம்கொள்ளச் செய்யும் உச்சாடனமாக இவ்வுரைகளின் ஒவ்வொரு சொல்லும் காலங்கடந்து நிகழ்காலத்தில் நின்றொலிக்கிறது. வாசித்தலுக்குப் பின்பு வாழ்வோடும் பூமியோடும் ஒருவித அணுக்கத்தை உண்டாக்கும் இதன் அர்த்தவீச்சு, நம் செயல்மனதின் பயணத்திசையை தீர்மானிப்பதாகவோ திசைமாற்றுவதாகவோ நிச்சயம் இருக்கும்.
திருமணம் போன்ற விழாக்களில் அன்பளிப்பாகவோ, சூழல் மற்றும் சமூக நிகழ்வுகளில் கரம்தருவதற்காகவோ.. எளிமையானதொரு புத்தகமாக ‘இருதயத்தை நோக்கி இரு உரைகள்’ புத்தகம் தன்னுரு அடைந்திருக்கிறது.
தொடர்ந்து நல்லதொரு புத்தகங்களை அறிமுகம் செய்திட வாழ்த்துக்கள் தோழமைகளே…..
அனைத்து புத்தகங்களையும் ஆர்டர் செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்….