டிராக்டர் சாணி போடுமா? என்ற கேள்வி வெறும் அறிவின் புத்தியில் இருந்து உருவான கேள்வி மட்டுமல்ல, அப்பழுக்கற்ற தூய இருதயத்தில் இருந்து உருவான அன்பின் ஆழம்பொதிந்த கேள்வி.
செறுக்கின் உச்சியில் இருக்கும் ஒட்டுமொத்த அறிவியல் உலகனைத்திற்கும் அதன் மனசாட்சியை நோக்கி எழுப்பிய கேள்வி. அதனால்தான் அறிவியலினால் இனி ஒன்றும் இயலாது என்றுணர்ந்து இறுதிகட்டத்தில் இருக்கும் ஒட்டுமொத்த கிழக்கு கூட்டத்தின் மனசாட்சி இன்று ஜே.சி.குமரப்பாவையும் அவரை உருவாக்கிய காந்தியத்தையும் அங்குலம் அங்குலமாக தேடுகிறது.
இந்த கேள்வி விவசாயிகளுக்கானது என்று மட்டும் நினைத்துக்கொண்டு சாதாரணமாக கடந்துசென்றுவிட முடியாது. நூற்பில் ஆடைகளை வாங்குவதற்காகவும் உரையாடுவதற்காகவும் நண்பர் சலீமுடன் வந்திருந்த காரத்திகேயன் அண்ணா பெண்களின் அணையாடை குறித்து பல ஆராய்ச்சிகள் செய்து இறுதிகட்ட பரிசோதனை முடிவில் இருக்கிறது. அவரிடம் உரையாடிக்கொண்டிருக்கும்போது அவர், முன்னாடி நம்ம பாட்டியெல்லாம் மாதவிடாயின்போது துணியைதான் பயன்படுத்தியிருக்கிறார்கள் , அதிலும் உமிச்சாம்பலை உள்வைத்து மடித்து உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்.
கரித்துகளும் உமியும் உள்இருக்கும் மொத்த அழுக்குகளையும் உறிஞ்சி எடுத்துவிடும். அதனால் கற்பப்பை தொற்றுகள் எதுவும் இல்லாமல் இருந்திருக்கிறது. இது இன்றைய பெண்களுக்கிருக்கும் மிகப்பெரிய உபாதைகளில் ஒன்றாக இருக்கிறது.
சம காலத்தில் உமிச்சாம்பலே கிடைப்பதில்லை. யாரும் வறட்டி தட்டுவதில்லை, அப்படியே மாடு வைத்திருப்பவர்களும் வறட்டி தட்டுவதற்கான மனநிலையில் இல்லை. வேறு அடுப்பு எரிக்கும் இடங்களை நோக்கிச்சென்றால் நெகிழி மற்றும் அட்டைகளின் சாம்பலே கிடைக்கிறது என்றார்.
நன்றாக யோசித்தால் டிராக்டர் சாணி போடுமா என்ற கேள்வி நம் சமகாலத்தில் இரத்தமும் சதையுமாக இருந்த தீர்க்க தரிசியின் ஆன்மாவினுடையதாக இருக்கிறது. நம் எதிர்கால சந்ததியிருக்கானதாகவும் நமக்கானதாகவும் இருந்திருக்கிறது. இயேசுவைப்போல , வள்ளலாரைப்போல பாரம் சுமந்தவர்களில் ஜே.சி.குமரப்பாவும் ஒருவராகவே இருக்கிறார். அவர்களைப்போலவே நாமும் அவரை தவறவிட்டோம். ஆனாலும் நமக்கு அவர்கள் அவர்களின் எண்ணக்குவியலை விட்டுச்சென்றிருக்கிறார்கள்.
பிரதிபலன் பாராமல் நமக்காக சிலுவை சுமந்து காயங்களை மறைத்துக்கோண்டு பூ மலர்வதுபோல மலர்தலுக்கான வாழ்வியல் வழியினையும் , எழுத்துக்களையும் விட்டுச்சென்றிருக்கிறார்கள். டிராக்டர் சாணி போடுமா என்ற புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரைகளும் அகம் மலர்வதற்கான வாசலாகவே இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் இத்தனை காலம் தெரியாமல் தவறு செய்துகொண்டிருந்த மனதிற்கு நின்று நிதானித்து செயல்பட கற்றுக்கொடுக்கிறது. அவருடைய வாழ்வு பெரும் பாடமாக இருக்கிறது. மனசாட்சியை அதன்போக்கிலேயே கேள்விகேட்டு அதனையே பதில் தேடவைக்கிறது அதன் கட்டுரைகள்.
அனுதினமும் மீண்டும் மீண்டும் படித்த கட்டுரைகளையே திரும்ப திரும்ப படித்துப்பாரத்துக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு சம்பவங்களும் சாட்சியமாக எனக்கு நெருக்கமாக இருக்கிறது. எப்பொழுதும் கூடவே வைத்திருக்கிறேன். கட்டாயம் இதில் இருக்கும் ஏதோ ஒரு வார்த்தை நம் அகத்தில் இருக்கும் அற உணர்வை விழிக்கச்செய்யும்.
நான் உணர்ந்தவைகளை தோழமைகளும், சொந்தங்களும் உணர்வதற்காக, குக்கூ காட்டுப்பள்ளியில் இருந்து தன்னறம் நூல்வெளியில் அச்சாக வந்திருக்கும் இந்த டிராக்டர் சாணி போடுமா? புத்தகத்தை மனதார பரிந்துரைக்கிறேன்…