உலகதேசங்கள் எல்லாமே கொடிய எண்டோசல்பான் விஷத்தை தடைசெய்த போது, இந்திய அரசாங்கம் மட்டும் அதற்கு சம்மதிக்காமல் ‘இந்தியா ஏழைநாடு. இதை தடைசெய்தால் நம் நாடு மேலும் வறுமைக்குள் சென்றுவிடும்’ என்றுசொல்லி அந்நஞ்சின் அனுமதிக்காக உலகநீதிமன்றத்தில் இரந்து நின்றது. ஆக, ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் நியாயத்தின் பக்கம் நிற்காமல் அதிகாரத்தின் ஆளுகைக்குள் அடிமைப்பட்டிருக்கும் துர்காலத்தில், ஏதுமறியாத எளியமக்கள் அவ்வதிகாரத்தின் கோரப்பசிக்கு சாவது மட்டும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேஇருக்கிறது.
நம்மாழ்வார் அய்யவுடைய குரல், ஏதோவொருவகையில் அடித்தட்டு சாமானியனின் எளியகுரலாகவே எப்போதும் ஒலித்திருக்கிறது. அவர்களின் நலனுக்காகவே அரசியலமைப்பை கேள்விகேட்டிருக்கிறது. தொடர்ச்சியாக நம்மீது சுமத்தப்படுகிற எல்லா விமர்சனங்களுக்கும், வகைப்படுதலுக்கும் பதில்வினையாக செயல்சார்ந்த தீவிரப்பாடும் அதற்கான அறிவார்ந்த பின்புலமுமே அடிப்படை வெளிப்படுத்துதலாக இருக்குமென்பதை நாங்கள் தீவிரமாக நம்புகிறோம். அத்தைகைய மாற்றங்களின் சாட்சிகளையும் நாங்கள் நேர்கண்டிருக்கிறோம். இவ்வாறான செயல்வழிகளை கையிலெடுத்தே இனிதொடர்ந்து பயணிக்கப் போகிறோம். தனித்து ஒதுங்கிக்கொள்ளலோ, சுயம்சார்ந்த வளப்படுத்திக்கொள்ளலோ அல்ல இது. தன்னளவில் இவைகளையும் போராட்டங்களாகவே மனதார கருதுகிறோம்.
த.ம.பிரகாஷ், மார்க்சியத்தை அதன் ஆழநுணுக்கங்களோடு உண்மையாக உள்வாங்கிக்கொண்டு இறங்கி வேலை செய்கிற ஓராளுமையாக இருக்கிறார். அதிதீவிரமான ஒரு நக்சல்பாரி இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டு பணிசெய்த ஒரு பொதுமனிதன். திருவண்ணாமலை பகுதியில் வசிக்கும் துணிதுவைக்கும் சலவைமக்களுக்கான அறிவுசார் மற்றும் கல்விபுலத்தை அமைத்துக்கொடுத்து, அவர்களுக்கென்ற தனியான ஒரு பணியிடத்தை உருவாக்கித்தந்திருக்கிறார். வெறுமனே சலவை செய்கிற இடமாக மட்டும், அவ்விடம் இருக்கவில்லை. அதுவொரு கல்விக்கான வெளியாக, அரசியல் கற்றுணர் தளமாக அந்த இடம் உருமாறியது.
தற்காலத்தில், சூழலமைப்புகளும் சித்தாந்த இயக்கங்களும் முன்னெடுக்கிற பலதரப்பட்ட அரசியல் வகுப்புகள், இருபது வருடங்களுக்கு முன்பிருந்தே அங்கு நிகழ்த்தப்பட அவர் பெரிதும் காரணமாக இருந்திருக்கிறார். இம்மக்களின் இளைய தலைமுறைப் பிள்ளைகள் தங்களைச்சுற்றி நிகழ்கிற அறவியல் மற்றும் அரசியல் விவகாரங்களை உற்றுகவனித்து அவைகளை ஆழமாக கற்றறிபவர்களாக இன்று உருமாறி நிற்கிறார்கள்.
அத்தகைய மனிதன், ஆழ்வாரின் ‘எல்லா உயிரும் பசி தீர்க’ புத்தகத்தை வெளியிட்டு, வாழ்வின்வழி பெற்ற தன்னனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
ஒருமணிநேரம் மட்டுமே இவ்வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. இரண்டு நாட்களின் மீதி நேரங்களில் காட்டுப்பள்ளி நிலம் மற்றும் புளியானூர் கிராமத்திற்கான இப்பருவகாலத்து களப்பணிகளை நண்பர்களோடு இணைந்து பணியாற்றப் போகிறோம்.
வருகையை குறித்து முன்கூட்டியே தெரிவித்தால், நிகழ்வை திட்டமிட ஏதுவாக இருக்கும், (பேச 9994846491, cuckoochildren@gmail.com)
“செயல்வழியே சத்தமெழுப்புவோம் அதிகாரத்திற்கு எதிராக”