“நீங்கள் நம்புகிற சித்தாந்தத்துக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருங்கள். அந்த சித்தாந்தங்கள் எப்பொழுதும் எளியமக்களுக்கானதாக இருக்கட்டும். அவர்களோடு வாழ்வுகலந்து அவர்களுள் ஒருவனாக மாறிப்போவதில்தான் சித்தாந்த முழுமை என்பதமையும். அந்த எளிய மக்களின் உழைப்பையே நாம்விரும்பும் மாற்றத்திற்கான செயல்வழிப்பாதையாக ஆக்கிக்கொள்ள வேண்டும். ஒரு சித்தாந்துகான சாட்சிகள் உருவாகும்போது, அது தானாகவே சாத்தியங்களை உருவாக்கும்” எழுபது வயதிலும் எளிய மக்களின் நலனுக்காக களமமைத்து அவர்களுக்கான அரசியலறிவை புகட்டிவரும் செயல்வாதி த.ம.பிரகாஷ் அவர்கள், தன்னுடைய அனுபவங்களின் வேராழத்திலிருந்து சொற்களைப் பகிர்ந்து, நம்மாழ்வாரின் “எல்லா உயிரும் பசி தீர்க” புத்தகத்தை வெளியிட்டது… சமகாலத்தில் நம் எல்லோருக்குமான பாதைவெளிச்சமானது. நாளை, கோயம்புத்தூர் கல்லூரியொன்றில் கல்விமுடிந்து வெளியேறப்போகிற எல்லா இளையதலைமுறைப் பிள்ளைகளுக்கும் இந்தப் புத்தகம் எவ்வித தொகைப்பெறுதலும் இல்லாமல் கைசேரப்போகிறது. கற்கள்சூழ நீர்க்கசிந்தோடும் ஓடையில் நிகழ்ந்துமுடிந்த இந்நிகழ்வுக்கு, வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்து, காடு எரியத்துவங்கும் இக்கோடையில் காட்டுப்பள்ளி நிலத்துக்கான செயலுழைப்பைக் கொடுத்த ஒவ்வொருத்தருக்கும் கனிந்த நன்றிகளை மனம் சேர்க்கிறோம். ஏதோவொருவகையில் நம்மாழ்வார் சொல்லிப்போன ஒவ்வொரு சொல்லும், வழிவழியாக தொடர்ந்துவரும் அறத்தின் சொல்தான்.