படிமலர்ச்சியில் உருவான இயல்தாவரங்களை நம்பித்தான் இம்மண்ணில் வாழும் பூச்சி, பறவை, விலங்கு என பல்வேறு உயிரினங்கள் இத்தனை ஆண்டு காலமாக வாழ்ந்து வபந்திருக்கிறது. சாலையோரத்தில் இருக்கிற மருதம், இச்சி, நாவல் மரங்களை சாலை விரிவாக்க அல்லது வேறேதேனும் காரணங்களுக்காக வெட்டிச்சாய்த்துவிட்டு, அதற்கு பதிலாக இங்குள்ள பல்லுயிர்களுக்குப் பழக்கப்படாத தூங்குமூஞ்சிவாகை, குல்முகர் போன்ற அயல்தாவர மரவகைகள்தான் நடப்படுகிறது. இதனால் மருதம், இச்சி, நாவல் போன்ற இயல்தாவர மரங்களில் பட்டையை, பூவை, இலையை, காயை, கனியை உண்டு வாழ்ந்துவந்த உயிரினங்கள் உணவற்று அழிந்துபோகிறது. அதனால் சூழலியல் சமநிலை பாதிக்கப்பட்டு, பல்வேறுவித பிரச்சனைகளுக்கு நாமும் ஆளாகிறோம். ஆதலால், மண்ணின் மரங்களை நடவேண்டும் என்று சொல்வது இனவாதம் அல்ல… இயற்கைவாதம்.
–
மண்சார் மரங்கள் என்பவை, அந்நிலத்தின் மனிதப்பண்பாட்டோடும் இயற்கைச்சூழலோடும் பிணைந்திருக்கும் உயிர்ப்புள்ள தாக்கத்தைப்பற்றி ஒரு எளிய அறிமுகம் செய்துவைக்கும் புத்தகம்தான் ‘மண்ணின் மரங்கள்’. வழிப்பாட்டுக் காரணி என்ற அளவில் நாட்டு மரங்கள் மற்றும் காடுகள் அமைந்திருப்பதன் சுருக்கமான பின்னணியும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
மதுரை மற்றும் அதன் சுற்றமைந்த நிலப்பகுதிகளில் சூழல்சார்ந்த போராட்டங்களையும் நிகழ்வுகளையும் கட்டமைத்து இயங்கும் நாணல் நண்பர்கள் தோழமைகளான தமிழ்தாசன் மற்றும் கார்த்திக் இருவருமிணைந்து ‘மண்ணின் மரங்கள்’ என்ற இப்புத்தகத்தை… அலைந்துதிரிந்த தங்களின் அனுபவங்களைக் கொண்டும் திரட்டிதொகுத்த தகவல்களைச் சேர்த்தும் நேர்பட எழுதியிருக்கிறார்கள்.
தன்னறம், குக்கூ காட்டுப்பள்ளி, நாணல் நண்பர்கள் ஒருசேர்ந்த உழைப்பில் அச்சுருவான இப்புத்தகம், மறுபதிப்பாக மதுரை புத்தகக்கண்காட்சி தும்பி அரங்கில் வெளியீடு அடைகிறது.
ஒரு பள்ளிக்கூடத்தின் பேச்சுப்போட்டியில் பங்கெடுத்துகொண்ட ஒரு சிறுமி தன்னுடைய உரைக்காக குறிப்பெடுத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், போட்டி முடியும்வரை கைகளுக்குள் இறுகப்பிடித்திருந்த புத்தகமாக ‘மண்ணின் மரங்கள்’ இருந்தது… என்று நண்பர்கள் பகிர்ந்த ஒரு செய்தி போதும், சேரவேண்டிய எளிய மனிதமனங்களில் இம்மண்ணின் மரங்கள் நிச்சயம் வேர்கொள்ளும்.
தொடர்புக்கு
9843870059