சுதந்திரம் தருவதற்கு ஆங்கிலேய அரசு ஒப்புதலளித்த பிறகு, காந்திக்கும் வினோபாவுக்கும் இடையே ஒரு உரையாடல் நிகழ்கிறது. அதில், சுதந்திர இந்தியாவுக்கான தனிக்கல்வியை வடிவமைக்கும்வரை என்ன செய்வது? எந்தமுறையை பின்தொடர்வது? என பல்வேறு விதமான ஐயப்பாடுகள் எழுந்தன.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட வினோபா, “சுயராஜ்யத்துக்கான புதிய கல்வியை வடிவமைக்கும் காலம்வரைக்கும் இந்தியப் பிள்ளைகள் அனைவருக்கும் விடுமுறை அளித்துவிடலாம். பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்துக்குமே இதை முன்னெடுக்கலாம்” என தன் தரப்பை முன்வைக்கிறார்.
அங்கிருந்த எல்லாரும் அதிர்ந்து, “அதற்கு வருடக்கணக்கு ஆகுமே?” என அச்சமுறுகையில், “ஆமாம், ஆகட்டுமே. ஏற்கனவே இருக்கும் தவறை தொடர்ந்து செய்வதால் ஏற்படும் விளைவை விட, அவசியமானதை உருவாக்க நாம் எடுத்துக்கொள்ளும் இந்த நிதானத்தின் விளைவு குறைவாகவே இருக்கும்” என தீர்க்கமாகச் சொல்கிறார் வினோபா.
ஏதோவொருவகையில், இந்த நுண்ணறிதலைத்தான் கல்விக்கான கண்திறப்பாக நாங்கள் அறிகிறோம். இந்திய நிலப்பரப்பெங்கும் பூமிதான இயக்கத்துக்காக அலைந்துதிரிந்த அதேசமயத்தில் ஆன்மமலர்வு கல்விக்காக தன்னுடைய சுயசிந்தனைகளை ஆற்றுப்படுத்திய வினோபா பாவேவின் கல்விசார் கோட்பாடுகளைத் தொகுத்து “கல்வியில் மலர்தல்” என்கிற நூல் உருவாகிறது.
குக்கூ காட்டுப்பள்ளியின் தன்னறம் நூல்வெளி வாயிலாக அக்டோபர் 2, காந்தி அவதரித்த தினத்தன்று வெளியீடடையும் இந்த முதற்பதிப்பு நூல், கல்விகுறித்தான நோக்கத்தோடு இயங்கும் எத்தனையோ மனதுகளின் ஏக்கக்குறைகளை தீர்த்துத் தெளிவுபடுத்தும் புத்தகமாக நிச்சயமிருக்கும். கீதா மற்றும் மாசிலன் இவர்களிணைந்து இந்நூலை எழுத்தாக்கமாக தொகுக்கிறார்கள்.
“கோடைகாலத்தில் விடுமுறை அளித்தால்…ஒன்று, உச்சி தகிக்கும் வெயிலில் பிள்ளைகள் அலைவார்கள். அப்படியில்லையென்றால் வீட்டுக்குள் முடங்கிக்கொள்வார்கள். எப்படியாயானும் இளையோர்களின் செயல்சக்தி வீணாகும். அதற்குப்பதிலாக, மழைக்காலத்தில் விடுமுறை அளிக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் நிலத்தில் வேலைசெய்யும் விவசாயியிக்கு உதவியாக மாணவப்பிள்ளைகள் சேற்றில் இறங்குவார்கள். அங்குதான் அவர்கள் வாழ்வைக் கற்பார்கள்
இந்திய நிலப்பரப்பினையும் அதன் மனிதயுழைப்பையும் ஆன்மத்தேடலையும் உள்வாங்கிக்கொண்ட ஒரு உள்ளத்திலிருந்து உதித்த இந்தக்ருத்துக்கள் எங்களை ஒட்டுமொத்தமாக நிலைகுலையச் செய்கிறது.
எதுவெல்லாம் கல்வி? என்கிற அறதரிசனத்துக்கான பாதையில் இப்புத்தகத்தின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் எறும்பென ஊர்கிறது.
தொடர்புக்கு
9843870059