தன் உள்ளார்ந்த இயல்பால் ஒருவன் தெரிவு செய்யும் செயலே தன்னறம் என்று கூறலாம். சுயதர்மம் என்றும் இதை தமிழாக்கம் செய்யலாம். தன்னுடைய ஆளுமைக்கும் தன் அடிப்படை இச்சைகளுக்கும் ஏற்பவே ஒருவனின் மனநிலைகளும் செயல்பாடுகளும் அமைகின்றன. இதை எளிய உளவியல் தளத்தில் நின்று புரிந்து கொள்வதே போதும். எச்செயலில் தன் உள்ளார்ந்த ஆற்றல் முழுமையாக வெளிப்படுகிறது என்று ஒருவன் எண்ணுகிறானோ அதுவே அவனுடைய தன்னறம் ஆகும். அதில் ஈடுபட்டு, அதை வென்று, அதைக் கடந்து சென்றுதான் ஒருவன் தன் விடுதலையை அடைய இயலும். ஒருவன் போரை, பிறிதொருவன் வணிகத்தை, பிறிதொருவன் கல்வியை, பிறிதொருவன் தொழிலை, பிறிதொருவன் சேவையை தன்னறமாகக் கருதலாம்.
தன்னறம் எதுவென்று அறியாத ஒருவன் இருக்க இயலாது. மிக மிக இளம் வயதிலேயே ஒருவனின் ருசிகள் அதில் சென்று படிகின்றன. சூழலாலும் குலத்தாலும் கல்வியாலும் உருவாவது அல்ல இது. ஆனால் சூழலும் குலமும் கல்வியும் அதில்பெரும்பங்கு வகிக்கின்றன. நம் உள்ளார்ந்த ஒரு விரல்நுனி பல திசைகளிலும் துழாவித்துழாவித் தேடி தனக்குரியதை சுட்டிக்காட்டி விடுகிறது. ஒருவன் தன்னறத்தின் மையத்தில் தன் அக ஆற்றலை முழுக்கக் குவிக்கிறான். அதில் திசைத் தடுமாற்றங்கள் இல்லை. ஆகவே இழப்புகள் இல்லை.
மாமரத்தில் எதன் வேரிலும் இலையிலும் பூவிலும் எல்லாம் மாம்பழத்தில் உள்ள அதே ‘ரசம்’ (சாறு)தான் உள்ளது. மாம்பழத்தில் அது கனிந்திருக்கிறது. ஒருவனின் தன்னறம் அவனடைய சிந்தனையில் மட்டுமல்ல எல்லா இயல்பிலுமே இரண்டறக்கலந்திருக்கும். அவனுடைய அன்,பு காதல், அவன் தேடும் முக்தி அனைத்துமே அந்த அக இயல்பால் தீர்மானிக்கப்பட்டிருக்கும். உப்பிலிருந்து உப்புச்சுவையை எடுத்தால் எஞ்சுவது என்ன? ஒன்றுமற்ற வெற்று.
ஆக, உயிரொன்றின் சுயவிடுதலையை சுடர்படுத்தும் எச்சிறு படைப்பாயினும் அதை அச்சில் கொண்டுவந்து பொதுவெளிப்படுத்தலே ‘தன்னறம் நூல்வெளியின்’ அடிப்படையாக உருவகித்துக் கொள்கிறோம். காலந்தோய்ந்த அறமரபு துவங்கி, காந்தி ஏந்திய அறவழி வரை… சாட்சி மனிதர்களாக நீள்கிற இவ்வரலாற்றின், முடியாத மனசாட்சிப் பக்கங்களுக்குள் பொத்திவைக்கப்படும் ஓர் மயிலிறகாக இதன் செயலமைவு அழகுற பிரார்த்திக்கிறோம்.
உயிரொன்றின் சுயவிடுதலையை சுடர்படுத்தும் எச்சிறு படைப்பாயினும் அதை அச்சில் கொண்டுவந்து பொதுவெளிப்படுத்தலே ‘தன்னறம் நூல்வெளியின்’ அடிப்படை-அற்புதமான வரிகள்.சில புத்தகங்கள் order பண்ணியுள்ளேன்.வளர்க உங்கள் சேவை