Description
“கேரளத்தின் வெவ்வேறு திணைகளில் வாழும் இனத்தவர் மொழிந்த கவிதைகளின் தொகுப்பு இந்த நூல். கவிதைத் தொகுப்பு என்ற நிலையைக் கடந்து இந்தத் திரட்டுக்கு பன்முக விரிவும் பன்னோக்கும் உள்ளன.
நாம் இதுவரை அறிந்திருக்கும் நாகரிகமான மொழிக்குக் கருவான ஆதிமொழியைப் பேசுகிறது. நாம் இதுவரை பேணி வந்திருக்கும் கலாச்சாரத்தின் உள்ளீடின்மைகளை அம்பலப்படுத்துகிறது. பண்பாட்டின் மானுட விழுமியங்களைச் சுட்டிக் காட்டுகிறது. நாம் இதுவரை ஒப்பனை துலங்கக் காட்டியவை அல்ல கவிதை; அது உண்மையின் தன்னெழுச்சி என்று விளக்குகிறது.
இவற்றின் வாயிலாக மொழி, பண்பாடு, கவிதை என்று நாம் காபந்து செய்து வைத்திருக்கும் சங்கதிகளை விட இதுவரை பேசப்படாமலிருந்த மனிதர்களின் மொழியும் வாழ்வும் எந்த வகையிலும் குறைவானதல்ல என்பது வெளிப்படையாகிறது. கூடவே நமது ‘மகத்தான’ பண்பாட்டுக்கு மேலதிக அர்த்தத்தையும் விரிவையும் இந்தக் கவிதைகள் சேர்க்கின்றன.
மலையாள இலக்கியத்தைக் கேரள இலக்கியமாக மாற்றியதில் பழங்குடிக் கவிதைகளின் பங்களிப்பு முதன்மையானது. புதுப் பெருக்கால் நதியை வளப்படுத்தியதற்கு இணையானது…”
~ கவிஞர் சுகுமாரன்
எம்.கோவிந்தன் மற்றும் ஆற்றூர் ரவிவர்மா ஆகியோரால் உருவாக்கப்பட்ட, கேரள இலக்கியத்துக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் இடையான தொடர்பு என்பது இன்றளவிலும் வலுவாகவே தொடர்கிறது. பிறமொழி இலக்கியம் தமிழில் மொழிபெயர்க்கப்படுகையில் அந்நில மக்களும், அவர்களின் வாழ்க்கை முறைகளும் நமக்கு அணுக்கமாக அறிமுகத்துக்குள்ளாகின்றன. தனது நிலத்தை எழுதுகையில் ஒரு கவிஞனின் அகம்கொள்ளும் ஆழமும் விரிவும் படைப்புவிசையின் உச்சகணங்கள்.கேரளத்து மலைநில வாழ்வின் அடர்செறிவை கவிதையில் நிகழ்த்துவதென்பது மழைச்சேற்று வனத்திற்குள் ஊறித்திரியும் மரவட்டைகள் போல ஆயிரம் கால்களால் நிலத்தை உணர்ந்தறிவது.
எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் நிர்மால்யா அவர்களின் பெரும் முயற்சியில் கேரளத்தைச் சேர்ந்த 18 பழங்குடிக் கவிஞர்களின் கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘கேரள பழங்குடிக் கவிதைகள்’ எனும் நூலாக வடிவம் பெற்றுள்ளது. கேரளத்தின் பழங்குடிகள் தங்கள் நிலங்களையும் அந்நிலம் சார்ந்த தங்கள் வாழ்வியலையும் தொடர்ந்து எழுதிவரும் சமகாலத்தில் அவர்களின் கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவது கவனிக்கப்படவேண்டிய நிகழ்கையாக இருக்கிறது. தன்னறம் நூல்வெளி வாயிலாக இந்நூலை வடிவமைத்து வெளியிடுவதில் நிறைகூர்ந்த மகிழ்வடைகிறோம்.
Reviews
There are no reviews yet.