Description
சின்னச் சின்ன ஞானங்கள் – நித்ய சைதன்ய யதி (தமிழில்: யூமா வாசுகி)
“இரண்டு வருட காலம் சிறுமி பெலீஷ்யா சொன்னதையெல்லாம் நான் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். பெரிய ஞானிகள் மட்டுமே சொல்லக்கூடிய எத்தனையெத்தனையோ மகத்தான வாசகங்களை அந்தப் பிஞ்சுக் குழந்தையிடமிருந்து நான் கேட்டுத் தெரிந்துகொண்டேன்! குழந்தைகளைப் பற்றியான என் புரிதல் அதன்பிறகு மிகவும் மாறிவிட்டது. அறிவெல்லாம் பெரியவர்களின் குத்தகை எனும் எண்ணம் எனக்கு இப்போது இல்லை.
நான் குழந்தைகளுடன் இருக்கும்போது, அவர்களின் களங்கமற்றதும் சத்தியமுமான அறிவின் முன்னால் தலைவணங்கி, அவர்களின் தரிசனங்களைக் காண ஆசைப்படுவேன். பெரும்பாலும் அந்தப் புனிதப் பிறவிகள் என்னை அனுக்கிரகிப்பதுண்டு. கடவுளின் ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க விரும்புகின்றவர்களெல்லாம் குழந்தைகளைப்போல ஆகவேண்டும் எனும் யேசுகிறிஸ்துவின் உபதேசத்தை, உச்சமானதொரு உண்மையாகவே நான் கருதிக்கொண்டிருக்கிறேன்…”
குழந்தைகளின் பொன்னிறப் பேருலகத்தை தனது ஆத்மவிழிகளால் தரிசித்த தத்துவகுரு நித்ய சைதன்ய யதிகளின் வார்த்தைகள்தான் மேற்குறிப்பிட்டவை. இன்னும் எந்த நம்பிக்கையில் இவ்வாழ்வுமீது நேசிப்புகொள்ள? என்னும் முகத்திலறையும் கேள்வியை மனசாட்சி எதிர்கொள்ளும்போதெல்லாம், எங்கோ சந்தித்த ஒரு குழந்தையின் முகத்தை நம் ஆன்மா நினைவுக்குள் திரைபரவவிடுகிறது. எஞ்சியிருக்கும் நேர்மறைகளைத் தோண்டியெடுத்து இவ்வாழ்வை இன்னும் இறுகப்பற்றிக்கொள்ளவும், அவநம்பிக்கைகளைக் கடந்து அடுத்தமனிதரின்மீது அன்புசெலுத்திடவும் நமக்கிருக்கும் ஒற்றை பற்றுக்கரம் இப்பூமியில் குழந்தைகள்தான்.
நாராயண குருவின் வழித்தோன்றலான குரு நித்ய சைதன்ய யதி அவர்கள் குழந்தைகளை மையமிட்டு மலையாளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். எழுத்தாளுமை யூமா வாசுகி அவர்களால் இந்நூல் முதன்முதலில் தமிழுக்கு அறிமுகமாகிறது. இதிலுள்ள ஒவ்வொரு கருத்துகளும், அனுபவங்களும் தன்னளவில் ஒவ்வொரு ஞானங்கள். கோட்பாடுகளின்படி அல்லாது இயல்பாய் குழந்தைகளின் வாழ்வுப்போக்கில் அமைந்த சில தரிசனத் தருணங்களை இந்நூல் வழியாக நமக்கு வெளிச்சப்படுத்தி உருப்பெருக்கிக் காட்டித்தருகிறார் யதி.
தன்னறம் நூல்வெளி தமிழில் இந்நூலை அச்சுப்படுத்தி வெளியிடும் வாய்ப்புக்குத் துணைநின்று, இந்நூலை தன்னுடைய சில கூடுதல் குறிப்புத்தகவல்களுடன் மொழிபெயர்த்துத் தந்திட்ட எழுத்தாளர் யூமா வாசுகி அவர்களுக்கு எக்காலத்தும் தீராநன்றிகள். அப்பா, அம்மா, ஆசிரியர், வளர்ந்தோர் என குழந்தைகளின் அகவுலகத்தை அறியவிரும்பும் அனைவருக்கும் இந்நூல் நிச்சயம் வாசிப்புநிறைவையும் அறிதலமைதியையும் அளிக்கும். இளையோர் இலக்கிய நூல்வரிசையில் இந்நூலும் தன்னை அமர்த்தி, சிறாருலகத்தின் சின்னச் சின்ன ஞானங்களை எல்லோருக்கும் எடுத்தளிக்கும்.
வருகிற ஏப்ரல் 14 அன்று, மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நிகழும் ‘கல்லெழும் விதை’ நிகழ்வுதனில் இந்நூல் வெளியீடு அடையவுள்ளது. குழந்தைகள் யதிக்கு அளித்த ‘சின்னவைகளின் ஞானத்தை’ யூமா வழியாக நாமும் அடைய, இந்நூல் நிச்சயம் ஒரு சிறுபாதையை மலையுச்சிநோக்கி திறக்கும்.
Reviews
There are no reviews yet.