Description
தன்மீட்சி – ஜெயமோகன்
இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிறார்கள். அடுத்த தலைமுறையில் இக்குழப்பங்களுக்கு இடமிருக்காது, சமூகத்திலேயே இதற்கான பொதுவிடைகள் உருவாகியிருக்கும், ஐரோப்பிய அமெரிக்க சமூகங்களில் இருப்பதைப்போல. சமூகம் இத்தனை அழுத்தத்தை தனிமனிதனுக்கு அளிக்காது.
திரும்பத்திரும்ப என்னிடம் இந்த வகையான வினாக்கள் கேட்கப்படுகின்றன. இத்தகைய வினாக்கள் இன்றைய தலைமுறையினரிடம் வலுவாக எழுந்துகொண்டிருக்கின்றன என நினைக்கிறேன். சென்ற தலைமுறையில் இத்தகைய வினாக்கள் இல்லை. அன்று ஒவ்வொருவரும் சமூகத்தின் பொது அடையாளத்தை தன் அடையாளமென்று கொண்டனர். வேலை, குடும்பம், தனிச்சொத்து, தொழில்வெற்றி, ஓய்வுவாழ்க்கை, இறப்பு என பிறர்போற்றும் வாழ்க்கையே தன் வாழ்க்கை என்று எண்ணி எளிதில் அமைந்தனர். அதுவே நம் மரபு நமக்களிக்கும் வாழ்க்கைப்பாதை. அதை ஏற்றுக்கொண்டால் சிக்கல்களே இல்லை.
இவ்வகையான கடிதங்களுக்குச் சென்ற இருபதாண்டுகளாகப் பதில் போட்டுக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இது நம் சமகாலத்தில் உள்ள பொதுப்பிரச்சினை. அனைவருக்கும் உரியது. இதற்கு தனிப்பட்ட ஆலோசனைகள், வழிகாட்டல்கள் உண்மையில் உதவாது. ஏனென்றால் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரசனை, தேடல், அறிவுத்திறன், வாழ்க்கைச்சூழல் சார்ந்து தானாகவே தேடிக் கண்டடையவேண்டியது இது. ஆகவே இப்பிரச்சினையின் பொதுவான தளங்கள் என்னென்ன என்று மட்டுமே சொல்லமுடியும். இரு கோணங்களில். ஒன்று, இது ஒன்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டு மனிதனுக்கே உரிய தனிப்பிரச்சினை அல்ல. என்றுமுள்ள மானுடப்பிரச்சினை. ஆகவே இதை மரபு எப்படி அணுகுகிறது என்று. இரண்டு, இன்றைய சூழலில் இது பொதுவாக எப்படிப் பொருள்படுகிறது என்று.
திரும்பிப்பார்க்கையில் நாம் நமக்களிக்கப்பட்ட நாட்களை நம்முடைய அகம் நிறைவுகொள்ளும்படி செலவிட்டிருந்தால், அந்த வாழ்க்கை முழுமையானதுதான்.
தன்னறத்துக்கும் சூழலுடன் ஒத்துப்போவதற்கும் நடுவே ஒரு துலாமுள் போலவே நாம் செல்லவேண்டியிருக்கிறது.
– ஜெ
Sudeeran S –
(அம்பும் அதன் நிழலும் ஒரே சமயத்தில் இலக்கைத் தாக்குகின்றன – சங்கப்பாடல் உவமை )
தன்னறம் குழுவிற்கும் , எனக்கு இப்புத்தகம் கிடைக்க உதவிய ஜெமோவின் வாசக வட்டத்திற்கும் நன்றி. இலவசமாகக் கிடைத்த புத்தகம் என்பதால் பாராட்டிய பிரமாணப் பத்திரமாக மாறிடக் கூடாது என்ற கவனத்துடன். முதலில் ஜெமோவை புற்றிய எனது புரிதல்களுடன் புத்தக விமர்சனத்திற்குள்.
ஜெமோ ஒரு அடையாளத்தில் வைத்து கொண்டாடப்பட வேண்டிய நபர் இல்லை என்பதே.
தமிழ் சூழ் இலக்கிய உலகை கூர்ந்து கவனிக்கும் எந்த வாசகனும் இதை அடையாளம் காண முடியும், ஜெமோவின் எழுத்தில் பரவலாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மத, சாதிய, வலது சாரிய, இடது சாரிய ஆதரவு சூழல்களைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு எழுதுகிறாரோ என்பதே. என் புரிதலில் அவரை அப்படிக் காண்பது முரண். சேற்று புதைக்குழிக்குள் தள்ளி முற்றிலுமாக தவிர்த்து விடுவதின் அபத்தத்தை அவரது தன் மீட்சி பதிலில் கண்டடைய முடிந்தது மகிழ்ச்சி.
ஒன்று மட்டும் இது வரை ஜெமோ வை அப்படி என்னால் ஒதுக்கி வைக்க முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. என்னதான் அவரது எழுத்தில் இருக்கிறது என்ற தேடுதலை இன்று வரைக் எனக்குக் கொடுத்துக் கொண்டுதானிருக்கிறது. சில இடங்களில் ரொம்ப இழுப்பது வலிந்து திணிக்கப்படும் காட்சிகள் என்ற குறை என் மனதில் இருந்தாலும். தன் மீட்சி அந்த சலிப்போடு இல்லை.
அரிதினும் அரிதாய் எழுதும் மக்களில், துதிபாடல், சாதியத்தேடல், மதப் பெருமை, இசங்களின் வால்பிடி என ஏதோ ஒன்றை தொங்கி வெளிவரும் புத்தகக் குவியல்களில் தனக்கான தனியான இடத்திலிருந்து சலிக்காது எழுதிக் குவிக்கும் எழுத்து இயந்திரத்தின் முன் நாமென்ன செய்ய முடியும். மெல்ல மெல்ல எழுத்து குவிப்புகளால் வளர்த்து கொள்ளும் பிரமாண்டத்தை பிரமிப்புலோ, சலிப்பிலோ கடப்பது மட்டும்தான்.
தன் மீட்சியை வாசித்தவுடன் என்னத் தோன்றியது, இது ஒரு குழு உறுப்பினர்களோ, அல்லது அவரை இணையத்தில் பின்தொடர்பவர்களோ அல்லது ஆசானென மதிப்பவரிடம் தொடுக்கப்பட்ட வெறும் கேள்வி பதில் தொகுப்பா, ஆசானைப் போன்று மாற அவர் கொடுக்கும் எளிய குறுக்கு வழியா, காலத்தை கடத்தி விடு வெறும் வியாபார எழுத்தா, தனக்கான இடம் தேடும் மனிதர்களுக்கானதா, வலது இடது ( என்ற ஜெயமோகனை) தேடி அடையும் புத்தகமா, குறை சொல்பவருக்கானதா, தத்துவார்த்த மதிப்பிடு கொடுக்கலாமா, இளைஞர்களுக்கான வழிகாட்டி நூலா ?
எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். இதில் ஏதோ ஒன்றை ஏதோ ஒரு பதிலில் தொட்டுச் சென்றுள்ளார்.
புத்தகம் வாசித்தவுடன் கிடைக்கும் மன நிறைவு எல்லாருக்கும் நிச்சயம் கிடைக்கும் என்ற உறுதியாக சொல்ல முடியும். அவர் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நேரத்தை எப்படி அளந்து சலிப்பில்லாது வாழ முடிகிறது என்பதை வாசித்து உணர முடிகிறது . சலிப்பில்லாது வாழ்ந்து எழுதிக் கொண்டேயிருக்கும் ஜெமோவிற்கும் சலிப்பும், வாழ்வியல் வெறுப்பும் அதன் மீதான விளைவுகளும் அதை எதிர்கொண்ட தன்னாற்றலும் வாசிப்பவர்களில் ஏதோ ஒரு சிலரின் ஊக்க மருந்து.
வாழ்வியல் சம்பவங்கள் உலகிலுள்ள அத்துனை உயிருள்ள, உயிரற்ற, இயந்திர மற்றும் பஞ்சபூதத் தொடர்பில் சுழலும் வாழ்வியல் சக்கரம். இதில் எத்தொடர் விடுபட்டாலும் தொடர்பை முடிப்பது அசாத்தியம். அத்துனை தொடர்போடு தொடரை கடப்பதற்கான வழியின் சிறுத்துளியே தன் மீட்சிக்கான உருவாக்கம்.
இன்றைய இளைஞர்களுக்கு இலக்கியம் சார்ந்த எதிர்கால வாழ்வின் தேடல்களுக்கும் அதைச்சார் குழப்பங்களுக்கும், தோல்விகளுக்கும் அதன் மூலம் முன்னேற தடையாகும் தடுப்பரண்களைத் தட்டி எறிய தன் மீட்சி உதவும்.