Description
நொய்யல் ~ நாவல்
“”தேவிபாரதியின் ‘நொய்யல்’ நாவல், இதுவரைக்கும் அவர் நாவல்களில் இல்லாத தொன்மங்களையும் தொன்மங்கள் சார்ந்த தீவிர உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் படைப்பாக உள்ளது. இந்நாவலில் அவர் சென்றடைந்திருக்கும் இடம் எனக்கு பலவகையான எண்ணங்களை உருவாக்குகிறது. தமிழின் மிக முதிர்ந்த, மிக சரியான யதார்த்தவாத படைப்பாளிகளில் ஒருவர் காரிச்சி போன்ற அதீதத்தின் விளிம்பிலேயே நடமாடும் ஒரு கதாபாத்திரத்தை ஏன் உருவாக்குகிறார்? இத்தனை ஆண்டுகளில் அவர் எழுதி எழுதி அடைய முடியாத எதை இந்நாவலில் அவர் அடைய எண்ணுகிறார்? எஞ்சியது என்ன? இந்நாவல் முழுக்க அவருக்கு இயல்பே இல்லாத வியப்பின் மொழி உருவாகி வந்திருக்கிறது.
இந்நாவல் தேவிபாரதியின் வேறெந்த நாவலிலும் இல்லாத அளவுக்கு அதீத தருணங்களைக் கொண்டிருக்கிறது. ஆகவே வேறெந்த நாவலிலும் இல்லாத அளவுக்கு மானுட உச்சங்களும் அவை வெளிப்படும் அழகிய சொற்தருணங்களும் கொண்டுள்ளது. ஆனால் அந்தச் சொற்தருணங்கள் நாம் செவ்வியல்தன்மை மேலோங்கிய நாவல்களில் காணும் சொற்றொடர்களால் ஆனவை அல்ல. அவை ஒரு நாட்டார்ப்பாடலில் வருவன போலிருக்கின்றன. ஒரு பயணத்தில் நாடோடி ஒருவனின் வாயில் இருந்து வெளிப்படுவன போலிருக்கின்றன.
இந்நாவல் முழுக்க திகழும் மீபொருண்மை அல்லது ஆன்மிகத் தன்மை என்பது முழுக்கமுழுக்க நம்முடைய நாட்டார் மரபு சார்ந்தது. நாவல் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும் ஆக்ரோஷமான அந்த நாட்டார் தன்மையே இதை ஒரு தனித்த படைப்பாக மாற்றுகிறது. நொய்யல் என்னும் ஆற்றை முழுக்க விளக்கிவிட முடியாத ஒரு ஆழ்பெருக்காக இந்நாவல் ஆக்கிவிடுகிறது, அதுவே இந்நாவலை முக்கியமானதாக ஆக்குகிறது.”
நொய்யல் நாவலின் முன்னுரையில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் வெளிச்சப்படுத்தும் வரிகள் இவை. தமிழின் யதார்த்தவாதப் புனைவிலக்கிய எழுத்தாளுமைகளின் நிறைவரிசையில், எழுத்தாளர் தேவிபாரதி படைத்திருக்கும் நாவல்களின், கதைகளின் அடர்வு என்பது எளிமையெனத் தோன்றும் பேராழம். மானுட மனதின் உள்விசாரணனை உரையாடல்களையும், அவமானப்பட்ட மனதின் அம்மணங்களையும் வீரியமிகு நெடியில் வெளிப்படுத்துவன தேவிபாரதியின் ஒவ்வொரு படைப்பும். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தான் எழுதிவந்த ‘நொய்யல்’ நாவலை தேவிபாரதி அவர்கள் நிறைவுசெய்திருக்கிறார். ஒருவகையில் இந்நாவலை அவருடைய நெடுங்கனவொன்றின் நிறைவேற்றம் என்றும் கொள்ளலாம்.
Reviews
There are no reviews yet.