Description
ஆயிரமாயிரம் மக்கள் சமூகத்தின் வாழ்வுயிரோட்டமாக இருந்த ‘குளம் உருவாக்குதல் மற்றும் பராமரித்தல்’ பணிகளையும் அதன் மரபார்ந்த வரலாற்றையும், சமகாலப்பயனினையும் ஆவணப்படுத்துகிறது இந்நூல். அனுபம் மிஸ்ரா எழுதிய இந்த ஆவணப்பதிவு, நிறைய வட இந்திய மாநிலங்கள் இந்த நூலை தங்களுடைய மொழியில் சமூகச்சொத்தாக்கிக் கொள்வதை பொதுஅறமாக வைத்திருக்கின்றனர். தமிழில் ஆழந்ததொரு மொழிபெயர்ப்பாக பிரதீப் பாலு இவ்வரலாற்றாவணத்தை தமிழ்படுத்தி இருக்கிறார்.
குளக்கரைகளில் இளைப்பாறும் வரலாறு புத்தகத்திலிருந்து
“மேகா ஒரு மேய்ப்பர். இது நிகழ்ந்தது ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு. அவர் தினமும் அதிகாலை தனது கால்நடைகளை வெளியில் ஓட்டிச் செல்வார். அங்கு பல மைல் தூரம் வரை மாபெரும் பாலைவன நிலம் பறந்து விரிந்திருந்தது. மேகா, சுராகி (surahi) எனும் நீர் சேமிக்கும் மற்பாண்டத்தை உடன் எடுத்துச்சென்று, நாள் முழுவதும் அதைத் தமது தாகந்தீர்க்கவெனப் பயன்படுத்திக் கொண்டு மாலை நேரத்தில் வீடு திரும்புவார். ஒருநாள் அவருக்கொரு யோசனை தோன்றியது. சிறிய பள்ளம் ஒன்றை தோண்டி, தனது சுராகியின் நீரை அங்கு கொட்டித் தீர்த்து, பிறகு அந்தப் பள்ளத்தை அவர் அக் (akk) இலைகள் (இதுவொரு பாலைவனத் தாவரம்) கொண்டு நிரப்பினார். அடுத்த இரண்டு நாட்களுக்கு பணி நிமித்தம் இங்குமங்கும் செல்ல வேண்டியிருந்ததன் விளைவு, அவ்விடத்திற்கு அவரால் வர முடியாமல் போனது.
மூன்றாவது நாள் அங்கு சென்று, விடாமல் துடிக்கும் தனது கைகளை கொண்டு பள்ளத்தை மறைத்து நிற்கும் இலைகளை அகற்றினார். பள்ளத்துக்குள் நீரின் சுவடே இல்லை என்ற பொழுதிலும், அப்பொழுது குளிர் காற்று அவரது முகத்தின் மேல் வீசியது. ‘நீராவி!’ என்று ஆச்சரியத்துடனும் ஒருவிதமான விந்தையுடனும் கூக்குரலிட்ட அவர், இத்துனை சூட்டுக்கு மத்தியிலும் நீர்ப்பதத்தால் உயிர்ப்புடன் இருக்க முடியும் என்பதையுணர்ந்து, அவ்விடம் குள உருவாக்கத்துக்கு உகந்தது என்பதை அறிந்தார்.
மேகா தனியாளாகவே குளத்தை உருவாக்கிவிடத் திட்டமிட்டார். அதுமுதல் தினமும் அப்பகுதிக்கு ஒரு மண்வெட்டியையும் தொட்டியையும் உடன் கொண்டு சென்றார். நாள் நெடுக நிலத்தை குடைந்தெடுத்து, தோண்டிய மணலை பால்(paal) மீது நிரப்பினார். பசுக்கள் தாமாகவே சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் சென்று மேயும். பீமனின் உடல்வாகு இல்லாமல் இருந்தாலும், அவர் பீமனின் நெஞ்சுரத்தை நிச்சயம் பெற்றிருந்தார் என்றே கூறவேண்டும்.
இரண்டு வருட காலம், அவர் இப்பணியை தனியாகவே தொடர்ந்து செய்துவந்தார். இப்பொழுது பால்-ன் முற்றுகை சற்று தொலைவிலிருந்தே காணமுடியும் நிலை ஏற்பட்டது. அதற்குப் பிறகுதான் கிராமவாசிகளும் இதை அறிய நேர்ந்தது.
அதுமுதல் கிராமத்துச் சிறார்களும் பிற மக்களும் அவருடன் செல்லத்துவங்கி, பின்னர் இந்த மாபெரும் பணியில் இணைந்து கொண்டனர். துவங்கப்பட்டு பன்னிரண்டு வருடங்கள் ஆகியிருந்தாலும், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்கு இடைப்பட்ட காலத்தில் மேகா இயற்கை எய்தினார். ஆனால் அவரின் மனைவி விறகில் உடன்கட்டை ஏறவில்லை. மேகாவுக்கு பதிலாக, கணவர் முடிக்காமல் விட்ட பணியை கையிலெடுத்துக் கொண்டார் அவர். அடுத்த ஆறு மாதங்களில் குளப்பணி நிறைவடைந்தது”
Reviews
There are no reviews yet.