Description
தன்னறம் நாட்காட்டி – 2023
“உங்களில் உள்ள அதே அதிசயம்தான் ஒரு அட்டைப்பூச்சியிலும் உள்ளது என்பதை கவனியுங்கள். தியானத்திற்கென இங்கு வருகையில் அப்பாவி அட்டைகளை மிதித்துவிட வேண்டாம். அவற்றால் விரைவாக நடக்க முடியாது. உங்களைப் போலவே அவையும் இங்கே திகழ விழைபவை. மெல்ல மெல்ல படியேறி அவை வருகின்றன. தியான அறைக்கு வந்து சேர்வதற்குள் ஒரு தீவிர சிந்தனையாளர் அவற்றை மிதித்துவிடுகிறார். அதோ மூலையில் அமர்ந்தபடி நம்முடன் தியானத்தில் ஈடுபட்டுள்ளது ஒரு சிலந்தி. எளிய இச்சிறு உயிர்கள் எல்லாமே நாம் சார்ந்துள்ள அதே வாழ்வெனும் வலையின் ஒரு பகுதியே….,”
~ நித்ய சைதன்ய யதி
“கேரளம் உலகை ஈ.எம்.எஸ் மற்றும் யதியின் கண்கள் வழியாகவே காண்கிறது” என்று ஒருமுறை புகழ்பெற்ற நூலாசிரியயையான கமலாதாஸ் குறிப்பிட்டுள்ளார். கேரளப் பேராளுமை நாராயண குரு அவர்கள் தோற்றுவித்த குருமரபின் நீட்சியில் நடராஜ குருவின் சீடராக அறியப்பட்டவர் குரு நித்ய சைதன்ய யதி. உளவியலாளராகவும் தத்துவ அறிஞராகவும் திகழ்ந்தவர். அமெரிக்கப் பல்கலைக்கழங்களில் கீழைத் தத்துவம் மற்றும் மாற்று உளவியல் துறைகளில் பேராசிரியராக சிலகாலம் பணியாற்றிவர். நித்ய சைதன்ய யதி மலையாளத்தின் புகழ்பெற்ற, பரபரப்பாக விற்கப்படும் நூலாசிரியர். இந்திய சமூகத்தின் தொன்மையான மரபிலிருந்து முளைத்தெழுந்த தத்துவங்களின் கனிந்த வடிவாக நித்ய சைதன்ய யதி தனது இறுதிக்காலம் வரை வாழ்ந்தார்.
2023ம் ஆண்டிற்கான தன்னறம் நூல்வெளியின் நாட்காட்டி நித்ய சைதன்ய யதி அவர்களின் தியான முகத்தைத் தாங்கி வெளிவந்துள்ளது. தமிழ்ச்சூழலின் எத்தனையோ படைப்புமனங்களுக்கு மானசீக ஆசானாக நித்யா வணங்கப்படுகிறார். அருவாக இப்பிரபஞ்சத்தில் நிறைந்த பேரிறையை வாழ்வில் நாம் நிகழ்த்தும் செயலதிர்வுகளால் உணரச்செய்யும் அகவழிப்பாதையை யதி நமக்கு வழங்கியிருக்கிறார். செயலே அறமென அவர் தெளிவுபடுத்திய நற்திசையை வணங்கி இந்நாட்காட்டியை வெளியிடுகிறோம்.
நன்றியுடன்,
தன்னறம் நூல்வெளி
Reviews
There are no reviews yet.