Description
டிப் டிப் டிப் : கவிதைத்தொகுப்பு ~ ஆனந்த்குமார்
“தன்னியல்பான எளிமை என்பது கவிதையை நிகழ்த்தும் பெருவிசை. சிந்தனைகளோ விமர்சனங்களோ படிமச்சமையல்களோ அதைச் செய்யமுடியாது. அந்த எளிமையை நடிக்கவே முடியாது. அது கருத்தின் எளிமை அல்ல. அதைத்தான் முதிராக்கவிதைகளில் கண்டுகொண்டிருக்கிறோம். எளிமையான வாழ்க்கைப்பார்வை, எளிமையான அரசியல் கருத்துக்களை. அது மொழியின் எளிமை அல்ல. கவிதையின் மொழியில் தன்னியல்புத்தன்மைக்கே இடம், செயற்கையான எளிமைக்கு இடமில்லை. அந்த எளிமை கவிஞனின் அகஎளிமை. இயற்கையின்முன், பிரபஞ்சப்பெருக்கின் முன், வாழ்க்கைநாடகத்தின் முன் அவன் ‘புனிதமான அறியாமையுடன்’ நிற்கும்போது உருவாகும் எளிமை அது.
அத்தகைய எளிமைதான் கவிஞனை மலர்களை, விலங்குகளை, குழந்தைகளை நோக்கிக் கொண்டுசெல்கிறது. அவனுடைய கவித்தன்னிலை வானை, வெளியை, கடலை, ஏரியை எல்லாம்கூட மலராக குழந்தைகளாக ஆக்கிவிடுகிறது. நான் விரும்பும் கவிஞர்கள் எல்லா மொழியிலும் முதன்மையாக அத்தகையவர்களே. சட்டையைக் கழற்றிவிட்டு ஒளிரும் குளிர்ச்சிற்றோடையில் இறங்குவதுபோல அவற்றுக்குள் நுழைந்துவிட முடிகிறது. தேவதேவன், கல்பற்ற நாராயணன், பி.ராமன், இசை என பலருடைய கவிதைகளில் நான் காணும் அழகு அது.
ஆனந்த்குமார் கவிதைகளை அந்த மனமலர்தலுடன் கண்டடைந்தேன். வாசித்தபின் புன்னகையுடன் அவற்றை காட்சியாக விரித்தபடி அமர்ந்திருந்தேன். எந்த ‘எண்ணத்தையும்’ ‘கருத்தையும்’ உருவாக்காத கவிதைகள். வெறும் புன்னகையில் கனியச்செய்பவை. காட்சிகளாக விரிந்து சட்டென்று இப்புடவி என நமைச் சூழ்ந்துள்ள மாபெரும் லீலையை உணரச்செய்யும் வரிகள்.”
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தோழமை ஆனந்த்குமாரின் கவிதைகளைப் பற்றி குறிப்பிடுகிற சுட்டுதல் இது. ஆழுள்ளத்தில் வாழும் குழந்தைமையைத் தொலைக்காத ஓர் மனம் கலைவழித் தன்னுடைய உணர்தல்களை நிகழ்த்திக்கொள்கையில் அல்லது புனைந்துகொள்கையில் அக்கலையின் மீது எக்காலத்துக்குமான மானுடசாயல் படிந்துவிடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் அதில் கண்டடைய ஓர் நதிப்பெருக்கு சுரக்கிறது. மொழியின் உச்சபட்ச சாத்தியமான கவிதையில் அத்தகைய நிகழ்கை மலர்கையில், அக்கவிதைகள் நம்முடைய அகவிருப்பத்திற்கு உரியவைகளாக நிறங்கொள்கிறது.
பலூன்காற்று போல கவிதைகள் தத்தம் உள்ளடக்கத்தின் எடையின்மையால் புறவெளியை மீறிப் பறந்தெழுகின்றன. ஆனந்த்குமாரின் கவிதைகள் அத்தகைய மிதத்தலை ஓர் சிற்றிறகின் பேரமைதியோடு நிகழ்த்துவதாய்த் தோன்றுகிறது. தர்க்கமூர்க்கம் உதிர்கையில் ஓர் மனிதன் எத்தகைய முதியவனானாலும் அவன் தன் தொல்குழந்தைமைக்கு மீள்கிறான்.
“என்ன சொன்னாலும்
ஒரு மெல்லிய பறத்தலைத்தான்
நான் சொல்ல முடிகிறது
எடை யாவும் களைதலை
பாதங்களின் விடுபடலை
ஆகாயம் மேவுதலை.” என யாவைக்குமான மேன்மையைச் சொல்லித் தன்னுடைய கவிதையொன்றை நிறைவுசெய்கிற ஆனந்த்குமார் அவர்களுடைய முதல் கவிதைத்தொகுப்பு தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியாவதில் மிகுந்த அகநெருக்கத்தை உணர்கிறோம்.
Reviews
There are no reviews yet.