Description
தன்மீட்சி – ஜெயமோகன்
இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிறார்கள். அடுத்த தலைமுறையில் இக்குழப்பங்களுக்கு இடமிருக்காது, சமூகத்திலேயே இதற்கான பொதுவிடைகள் உருவாகியிருக்கும், ஐரோப்பிய அமெரிக்க சமூகங்களில் இருப்பதைப்போல. சமூகம் இத்தனை அழுத்தத்தை தனிமனிதனுக்கு அளிக்காது.
திரும்பத்திரும்ப என்னிடம் இந்த வகையான வினாக்கள் கேட்கப்படுகின்றன. இத்தகைய வினாக்கள் இன்றைய தலைமுறையினரிடம் வலுவாக எழுந்துகொண்டிருக்கின்றன என நினைக்கிறேன். சென்ற தலைமுறையில் இத்தகைய வினாக்கள் இல்லை. அன்று ஒவ்வொருவரும் சமூகத்தின் பொது அடையாளத்தை தன் அடையாளமென்று கொண்டனர். வேலை, குடும்பம், தனிச்சொத்து, தொழில்வெற்றி, ஓய்வுவாழ்க்கை, இறப்பு என பிறர்போற்றும் வாழ்க்கையே தன் வாழ்க்கை என்று எண்ணி எளிதில் அமைந்தனர். அதுவே நம் மரபு நமக்களிக்கும் வாழ்க்கைப்பாதை. அதை ஏற்றுக்கொண்டால் சிக்கல்களே இல்லை.
இவ்வகையான கடிதங்களுக்குச் சென்ற இருபதாண்டுகளாகப் பதில் போட்டுக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இது நம் சமகாலத்தில் உள்ள பொதுப்பிரச்சினை. அனைவருக்கும் உரியது. இதற்கு தனிப்பட்ட ஆலோசனைகள், வழிகாட்டல்கள் உண்மையில் உதவாது. ஏனென்றால் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரசனை, தேடல், அறிவுத்திறன், வாழ்க்கைச்சூழல் சார்ந்து தானாகவே தேடிக் கண்டடையவேண்டியது இது. ஆகவே இப்பிரச்சினையின் பொதுவான தளங்கள் என்னென்ன என்று மட்டுமே சொல்லமுடியும். இரு கோணங்களில். ஒன்று, இது ஒன்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டு மனிதனுக்கே உரிய தனிப்பிரச்சினை அல்ல. என்றுமுள்ள மானுடப்பிரச்சினை. ஆகவே இதை மரபு எப்படி அணுகுகிறது என்று. இரண்டு, இன்றைய சூழலில் இது பொதுவாக எப்படிப் பொருள்படுகிறது என்று.
திரும்பிப்பார்க்கையில் நாம் நமக்களிக்கப்பட்ட நாட்களை நம்முடைய அகம் நிறைவுகொள்ளும்படி செலவிட்டிருந்தால், அந்த வாழ்க்கை முழுமையானதுதான்.
தன்னறத்துக்கும் சூழலுடன் ஒத்துப்போவதற்கும் நடுவே ஒரு துலாமுள் போலவே நாம் செல்லவேண்டியிருக்கிறது.
– ஜெ
Reviews
There are no reviews yet.