Description
தூரத்து மலையை ஏக்கத்துடன் பார்த்தவாறு காத்திருக்கிறேன்
மலையிலிந்து ஒரே தாவலில் வந்ததுபோல்
தீண்டிவிடும் நெருக்கத்தில்
திடுமென சன்னலில் வந்தமர்ந்தது
ஒரு குரங்கு
எதிர்பாரா இக்கணத்தில் இருவருக்கும் பதற்றம்
வேடிக்கையாக எனது இடப்புறமும் வலப்புறமும்
எட்டி எட்டிப் பார்க்கையில் நான் அதைப் பார்க்கவில்லை
அதுதான் என்னை ஒரு காட்சியாய் பார்த்துக் கொண்டிருக்கிறது
என்பதாய் ஓருணர்வு
உடன் ஒரு பேருணர்வு
சன்னலில் முடியும் இவ்வீடு என் கூடு
மலைக்கப்பாலும் நீளும் வெளி முழுதும் அவைகளின் வீடு.
~ ஸ்ரீநேசன்
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழிலக்கியச்சூழலில் தனக்கேயுரிய அகவளத்தோடு, குறிப்பிடத்தக்க மூத்த கவிஞர்களில் ஒருவராகத் திகழ்பவர் ஸ்ரீநேசன். கவிஞர் ஸ்ரீநேசன் அவர்களால் எழுதப்பட்ட புதிய கவிதைகளின் தொகுப்பு ‘தப்பு விதை’ தன்னறம் நூல்வெளி வாயிலாக விரைவில் வெளியீடு கொள்கிறது. சலனமற்ற குளத்தில் விழும் இலை சிற்றலைகளை எழுப்பி கரையைத் தொடுகையில், இலையின் ஆற்றல் பெருமடங்காகிறது. உதிர்வதும் உதிர்க்கப்படுவதும் நிச்சயமில்லா நிகழ்கை. அமைதியில் ஏற்கும் குளமும், அமர்ந்திருந்து காணும் கண்களும் அக்கணத்தின் பிணைப்பில் இருப்பதாலேயே அக்காட்சி ஈரம் குறையாமல் நினைவில் எஞ்சுகிறது.
‘எப்பொழுதும்’ என்பதன் மீதானதைவிட ‘எப்போதாவது’ என்பதின் மீது குவியும் எண்ணங்களின் சொற்பிரதிகளாக ஸ்ரீநேசனின் கவிதைகள் நிலைகொள்கின்றன. கண்டடைய ஏங்கும் விடையின் உண்மையான வழியைத் துலக்கமாக்கி, விரித்துக் காட்டுகிறது இம்மனித உடல். அதைப் பந்தமாக்கி நடக்கையில் ஒளிகூசும் பேரொளியை நாமடையும் சாத்தியங்கள் பிறக்கின்றன. கவிஞர் ஸ்ரீநேசன் நிதானத்தின் கைகொண்டு ஆரவாரமற்ற கவிதைகளையே இங்கு தருவிக்கிறார். உடல் அதற்கான ஊடகமாகியிருக்கிறது. அவ்வகையில், இத்தொகுப்பின் ஒவ்வொரு கவிதையிலும் பாசாங்கற்ற ஓர் கண்டடைதல் நிகழ்ந்திருக்கிறது
Reviews
There are no reviews yet.