Description
தேவதேவன் கவிதைகள் ~ இரு பெருந்தொகுப்புகள் : முன்வெளியீட்டுத் திட்டம்
“ஒரு சீனக்கதை. சீனப்பெருவீரர் ஒருவர் தன் வாளை சாத்தியமான எல்லை வரை கூர்மைப்ப்படுத்த விரும்பினார். அந்தக் கூர்மைக்கு முன்னால் உலகின் எந்தச்சக்தியும் எதிர்த்து நிற்கக்கூடாதென எதிர்பார்த்தார். தன் உடலையும் மனதையும் கையையும் கூர்மைப்படுத்திக்கொண்டார். கடைசியில் அம்மூன்றும் அவரது வாளில் வந்து அமைந்தன. ஆகவே வாளைத் தீட்ட ஆரம்பித்தார்
தீட்டும்தோறும் வாள் தேய்ந்ததே அல்லாமல் உச்சகட்ட கூர்மை நோக்கிச் செல்லவில்லை. ஒவ்வொரு முறை கூரிய நுனியில் விரலால் வருடும்போதும் அவருக்குள் ஒரு குரல் சொன்னது. இந்தக்கூர்மை போதாது என. ஆகவே அவர் மலையுச்சி நோக்கிச் சென்றார். அங்கே தனிமையில் வாழ்ந்த பெருங்கவிஞர் துஃபு வைக் கண்டு கேட்டார். இந்த வாளை இன்னமும் கூர்மையாக்க நான் என்ன செய்யவேண்டும்.
’அந்த நுனிக்கு உன் சொந்தக்குருதியில் ஒரு துளியை உண்ணக்கொடு’ என்றார் துஃபு. ஆகவே அவர் கீழிறங்கிவந்து தன் சொந்த ரத்தத்தை ஒருதுளி சேர்த்துத் தீட்ட ஆரம்பித்தார். வாள் தட்டாரப்பூச்சியின் சிறகு போலவும் தெறிக்கும் நீர்த்துளி போலவும் கூர்மை கொண்டது. தேவதேவனின் இக்கவிதைகள் இதயத்தின் குருதி சேர்த்துத் தீட்டப்பட்டவை. ஆகவே நம் காலகட்டத்தின் வேறெந்தச் சொற்களையும் விடக்கூர்மையானவை.
ஒரு சாதாரண வாசகனாக அல்ல, தமிழின் இந்தக்காலகட்டத்தின் முதன்மையான எழுத்தாளனாக , இந்தக்காலகட்டத்தின் இலக்கியமதிப்பீடுகளைத் தீர்மானிப்பவர்களில் ஒருவனாக நின்று ஒன்று சொல்கிறேன். இந்த அவையில் அமர்ந்திருக்கும் நீங்கள் அனைவரும் இறந்து மறக்கப்படுவீர்கள். உங்கள் குழந்தைகள் மறக்கப்படும். இந்நகரின் ஒவ்வொரு கட்டிடமும் ஒரு கல் இன்னொரு கல் மீது அமராதபடிக்கு இல்லாமலாகும். அதன்பின்னரும் தேவதேவனின் கவிதைகள் வாழும்.”
~
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தன்னுடைய மனதுக்கு மிக அணுக்கமானவராகவும், ஆசிரியராகவும் போற்றிக் கருதுகிற கவிஞர் தேவதேவனைப் பற்றி குறிப்பிடும் பெருந்திரள் சொற்பெருக்கின் ஒருசில வரிகள் இவை. சமகாலத்தில் தமிழ் கவிதையுலகில் நிகழ்ந்த உச்சபட்ச சாத்தியங்களில் ஒன்றென நாம் தேவதேவனை அறிவித்து வியப்பதில் சிற்றளவும் தயக்கமில்லை. ‘மொழி தனது சாத்தியங்களை அடுத்தகட்டத்திற்கு அதிகரித்துக்கொள்ள துணைநிற்பதே கவிஞனின் இறுதி இலக்காக இருக்க முடியும்’ என்ற ஆற்றூர் ரவிவர்மாவின் வரிகளுக்கு முழுக்க முழுக்க நேர்மை செய்கின்றன தேவதேவன் அவர்களின் கவியுலகு. எல்லா துயர்களுக்கு நடுவிலும் கருணையையும் அறத்தையும் தேடித்துழாவி கண்டைந்து மலர்த்துகிற ஓர் தூய பாணன் போல தேவதேவன் நம்மோடு தனித்துலவுகிறார்.
அன்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய கவிஞர் தேவதேவனின் கவிதைகளை தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியிடும் பெருங்கனவு என்பது நெடுங்கால அகவிழைவாக தங்கிக்கிடந்த ஒன்று. அத்தகைய கனவொன்று யதார்த்தத்தில் நிகழ்கையில் வெறும் நன்றிப்பெருக்கு மட்டுமே எஞ்சுகிறது. ஆகவே, இதுவரை அச்சில் வெளிவராத தேவதேவன் கவிதைகளைத் தொகுத்து, அதை இருபெரும் தொகுதிகளாக, தேர்ந்த அச்சுத்தரத்தில் உருவடைந்த புத்தகங்களாக வெளியிடும் செயற்பணியைத் துவக்கியுள்ளோம். ஆனால், இப்பெரும்முயற்சியை நிறைவுற நிறைவேற்ற உங்கள் ஒவ்வொருவரின் உதவிப்பங்களிப்பையும் தன்னறம் வேண்டுகிறது..
Reviews
There are no reviews yet.