Description
‘கூழாள்’ என்றொரு பழங்காலச் சொல் தமிழில் உண்டு. அச்சொல்லிற்கு ‘சோற்றுக்காக யாரேனும் தன்னை எழுதிக் கொடுக்கை’ என்று அர்த்தம். உண்ணும் உணவுக்காகத் தன்னையே எழுதிக்கொடுக்கும் மனிதர்களும் நம் சூழலில் வாழ்ந்திருக்கிறார்கள். பாதி ரசமிழந்த கண்ணாடியின் பழுப்பேறிய வானத்தில் சில பறவைகள் பறந்து மறைவதைப்போல, இலக்கியமும் அவ்வப்போது சாமானியர்களைப் பிரதிபலிக்கிறது. இலக்கியத்தின் வளர்நுனியான கவிதையிலும் அம்மக்களின் பாடுகள் காலந்தோறும் பாடுபொருளாகப் பேசப்படுகின்றன.
மண்சாலையின் சக்கரத்தடத்தில் மழைநீர் வழிந்தோடுவதைப் போல பழமையின் வழித்தடத்தில் எழுதப்பட்ட புதியபுராணம் என்றே இந்நூலின் ஒவ்வொரு கவிதைகளும் அர்த்தங்கொள்ள விழைகிறது. கவிதைகளை காட்சிமனதுடன் இணைக்கச்செய்யும் உயிர்ப்பாலமாக இந்நூலில் ஒளிப்படங்கள் நிறைந்திருக்கின்றன. கவிதைகள் பேசுகிற மையக்கருவை படிமங்களாக உறையவைத்துள்ளன அந்த ஒளிப்படங்கள்.
கார்த்தி எழுதிய கவிதைகள் தொகுப்படைந்து ‘மனுசபுராணம்’ கவிதைநூலாக பிரசுரமாவதன் பின்னணியில் கண்ணீர்காலத் தத்தளிப்பும் தாக்குப்பிடிப்பும் ஒளிந்திருக்கிறது. சினையை வெளித்தள்ளும் தாய்விலங்கின் முனகல்போல வீதிமனிதர்களின் மனக்குரலை நம்மால் முழுதாக அறியமுடிகிறது. இனி அவர்களை நாம் காணும்போது நம் கண்ணோட்டத்தில் தாக்கத்தை உண்டாக்கும் அளவுக்கு இந்நூலின் கவிதைகளும் ஒளிப்படங்களும் நம்மை சமன்குலைக்கும். நடுவனத்து நெடுங்கல் முன்பாக எரியும் தீச்சூடம் போல மனுசபுராணம் கவிதைநூலின் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு ஒளிப்படமும் வாழ்வுக்கான பிரார்த்தனையைச் சுமந்து எரிந்தடங்கும்
Reviews
There are no reviews yet.