Description
யதி : தத்துவத்தில் கனிதல்
“நான் இமய முகடுகளில் பலமுறை ஏறிச்சென்றதுண்டு. அங்கு மிக உயரத்தில் பனி பாறை போல உறைந்திருக்கும். அதைத் தொட்டால் பனி மெல்ல உருகி பள்ளம் ஏற்படுகிறது. அதன் வழியாக நீர் துளித்துளியாக வழிகிறது. பாறை விரிசலிடுகிறது. உடைந்து சிறு ஓடையாக வழிகிறது. அது பெரிய நீரோடையாகலாம். அப்போது நீர்சுழிக்கும் ஒலி ஏற்படுகிறது. ஓடை சிறு வெள்ளாடு போல தாண்டிக் குதிக்கிறது. அது கங்கையாகலாம். மந்தாகினியாக நடைபோடலாம். ருத்ர பிரயாகைக்கு வரும்போது பெயருக்கு ஏற்ப ரெளத்ர பிரவாகம்தான். காதுகளை உடைக்கும் பேரோசை. பிறகு ரிஷிகேசம். நீர் மலினமடைகிறது. காசியில் அதில் சகல பாவங்களும் கலக்கின்றன. கல்கத்தாவில் கங்கை கடல் போலிருக்கும். மறுகரை தெரியாது. அதன்மீது கப்பல்கள் நகரும். கடலும் கங்கையும் ஒன்றாகுமிடம் எவருக்கும் தெரியாது. ஆயிரம் ஒலிகள் அதன்மீது ஒலிக்கும். ஆனால் கங்கையும் கடலும் பேரமைதியில் மூழ்கியிருப்பதாகப்படும். பனிப்பாறையின் அதே அமைதி.
நம் பனிப்பாறையை அனுபவமெனும் விரல் தீண்டும்போதுதான் விழிப்பு ஏற்படுகிறது. தீண்டப்படாத பனிப்பாறைகள் ஒருவேளை யுக யுகங்களாக அங்கேயே, யார் பார்வையும் படாத உயரத்தில், அப்படியே இருந்து கொண்டிருக்கக்கூடும். பெரும் செவ்விலக்கியங்கள் மெளனமானவை. அவை ஒரு மனதின் வெளிப்பாடுகளல்ல, பல்லாயிரம் வருடங்களாக உறைந்து கிடந்த ஒன்று உயிர் பெற்றெழுவது ஆகும். மனம் என்பது ஒரு தனிமனித அமைப்பல்ல. ஒரு பெரும் பொதுமை அது. காலாதீதமானது.
தூலங்களில் மட்டும் ஈடுபட்டு ஆழ்ந்த அனுபவங்களை மறந்துபோன ஒரு தலைமுறையினர் நாம். துரியத்தின் தளத்தை நமது படைப்புலகில் நாம் அடைய முடியாது போகலாம்; காரணத்தின் தளத்தை தொடமுடியாது போகலாம்; குறைந்தபட்சம் பிரபஞ்ச சாரத்தின் ஒளி பரவிய கனவின் தளத்தையாவது தொட்டறிய முயல்வோம்.”
~ நித்ய சைதன்ய யதி
மெய்ஞான முன்னோடிகளான நாராயணகுரு மற்றும் நடராஜகுரு ஆகியோர்களின் தத்ததுவமரபுத் தொடர்ச்சியின் நீட்சியாகத் தனது ஊழ்கத்தில் நின்றுதித்த குரு நித்ய சைதன்ய யதி அவர்கள் எழுதிய கட்டுரைகள் மற்றும் அனுபவக் குறிப்புகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடும் முயற்சியைத் துவங்கியிருக்கிறோம். தனது வாழ்வுப்பாதை குறித்தும், தத்துவதரிசனம் குறித்தும் தான் நம்பியுணர்ந்த உண்மைகளை அறிவுச்செறிவான மொழிநடையில் யதி எடுத்துரைக்கும் புத்தகமாக இந்நூல் அமையவிருக்கிறது.
எழுத்தாளர்கள் ஜெயமோகன், நிர்மால்யா, பாவண்ணன், சூத்ரதாரி ஆகிய முதன்மைப்படைப்பாளிகள் மொழிபெர்த்துத் தொகுத்த செறிவடர்ந்த கட்டுரைகள் இப்புத்தகத்தில் இடம்பெறவுள்ளது. புத்தகத்திற்கான தலைப்பாக ‘யதி : தத்துவத்தில் கனிதல்’ எனும் தலைப்பைத் தெரிவு செய்திருக்கிறோம். மெய்ஞானத் தத்துவத்தை அதற்கேயுரிய தெளிவோடும் ஆழ்ந்த எளிமையோடும் விளக்கும் அறிந்துணர்தலின் கதையென இந்நூல், நம் அகவெளியின் நிகர்தெய்வத்தை அறிவதற்கான எழுத்துப்படைப்பாக தமிழடைந்து வெளிவரவுள்ளது.
தன்னறம் நூல்வெளி வாயிலாக இந்நூலை, தேர்ந்த அச்சுக்காகிதத் தரத்தில் கெட்டி அட்டையிட்ட செம்பிரதியாக அச்சில்கொண்டுவருகிறோம்
இப்பொழுது, நித்ய சைதன்ய யதி அவர்களைப்பற்றிய வாழ்வறிமுக நூலான இப்புத்தகத்திற்கும் அந்த நல்நிகழ்கை நிகழவேண்டுமென்ற நற்கனவை நெஞ்சில் ஆவலுடன் சுமந்திருக்கிறோம். சமகாலத்தில் இச்சமூகத்தில் வாழ்ந்துமறைந்த நவீனவேதாந்தியான ஒரு பெருந்துறவியை, அவருடைய அனுபவ அறிதலின் சொற்களின் வழியாக அறிமுகப்படுத்தும் முதல்நிலைத்தெளிவை இப்புத்தகம் வாசிப்புமனங்களுக்கு நிச்சயம் நல்கும்.
கரங்குவிந்த நன்றிகளுடன்,
தன்னறம் நூல்வெளி
Reviews
There are no reviews yet.