Description
Ahimsa Toys – Subid
சுபீத் எழுதிய நூல் – Ahimsa Toys
தன்னறம் நூல்வெளி வெளியீடு
கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சுபீத், செருப்பில்லாத கால்களால் இந்திய நிலப்பரப்பு முழுதுக்கும் தொடர்ந்து பயணிப்பவராகவும், குப்பையிலிருந்து பொம்மைகளை உருவாக்கும் நற்கலையை குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பராகவும் அறியப்படுகிறார். டெல்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Delhi) வடிவமைப்புத்துறையில் உயர்படிப்பு முடித்தவர் சுபீத். ஆனால், அந்த அடையாளம் வழியாக அவருக்கு உண்டாகவிருந்த எப்புகழையும் எப்பொறுப்பையும் ஏற்காமல், தன் கல்வித்தகுதி மற்றும் பணிவாய்ப்பு என எல்லா வசதிகளையும் உதறிவிட்டு வீதியைநம்பி விடுதலைகொண்டவர்.
குப்பைகளிலிருந்து குழந்தைகளுக்கான பொம்மைகள் மற்றும் அறிவியல்மாதிரிகள் செய்கிற ஒரு பெருங்கலைஞனாக ஊரூராக அலைந்து திரிகிறார். மானுட அறிவியலாளர் ‘அர்விந்த் குப்தா’ அவர்களை தனது முதலாசானாக மனதிற்கொண்டு, தன்னுடைய பயிற்றுவிப்புப் பயணத்தை எல்லைவிரித்த சுபீத் அவர்களின் செயலசைவு ஒவ்வொன்றுமே அதற்குரிய காலவிளைவை உருவாக்கி வருகிறது. கல்விசார்ந்த வெவ்வேறு மட்டங்களில் சுபீத்தின் அணுகுமுறைகள் மாற்றத்திற்கான ஊற்றுக்கண்ணாக மாறியுள்ளன.
தற்சமயம் சுபீத் அவர்களின் முழுநேர அர்ப்பணித்தல் என்பது, அறிவியல் தொழில்நுட்பங்களை எளிமையான கருவிகள் வழியாக வெளிப்படுத்தும் உபகரணங்களை உருவாக்குவதுதான். அத்தகைய வடிவமாதிரிகளை உருவாக்கி, அதன்வழி அறிவியலை எளிமைப்படுத்தி குழந்தைகளின் அகமடையச்செய்யும் தணியாக்கனவு அவருக்குள்ளது. இரண்டு கட்டைப்பைகள் நிறைய பழைய ஸ்ட்ராக்கள், சி.டி.க்கள், ரப்பர் பேண்டுகள், காகிதங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள்… இவைகளைச் சுமந்து குழந்தைகளைச் சென்றடைய தேசமெங்கும் அலைந்துதிரியும் ஒரு குப்பைத்துறவி போல சுபீத் உயிர்த்திருக்கிறார்.
குழந்தைகளுக்கான பொம்மைகளை குப்பைப் பொருட்களிலிருந்து உருவாக்கி, அறிவியலையும் அறவியலையும் அகம்பதிக்கும் எண்ணத்தில் சுபித் எழுதியிருக்கும் புத்தகம் ‘Ahimsa Toys’. பத்மஸ்ரீ ‘அர்விந்த் குப்தா’ எனும் ஆசானின் வழியில், அவருடைய செயல்களின் நீட்சியாக இந்நூலை உருவாக்கியிருக்கிறார். இத்தனைக்காலம் ஊரூராகச் சென்று குழந்தைகளிடம் அவர் நேரில் கற்பித்த பொம்மைகளின் செய்முறைக் குறிப்புகளை எளிய மொழியில் (ஆங்கிலத்தில்) இப்புத்தகம் கொண்டிருக்கிறது.
குப்பைகளை பொம்மைகளை மாற்றுவதற்கான செய்முறைக் குறிப்புகளை உரிய ஓவியங்களோடு கொண்டிருக்கும் செய்முறைநூல் இது. இந்நூலுக்கான அற்புதமான கோட்டோவியங்கள் அனைத்தையும் ஓவியர் பிரகாஷ் அவர்கள் வரைந்திருக்கிறார். ஈராண்டுகள் காத்திருப்பு கடந்து இப்புத்தகம் முழுவடிவம் பெற்று ஓரிரு வாரத்தில் அச்சாகி வெளிவருகிறது. முதற்கட்டமாக இந்நூல் ஆங்கிலத்தில் வெளிவருகிறது. கூடிய விரைவில் இந்நூல் தமிழிலும் மொழிபெயர்ந்து வெளியீடு கொள்ளும்.
பிரம்மாண்டமான தொழிற்சாலைகளில், மனிதர்களும் இயந்திரங்களும் பேருழைப்பில் இணைந்து உருவாக்கும் விலையுயர்ந்த பொம்மைகள் நிகழ்த்தும் தீங்கென்பது பூமியின் புறச்சூழலிலும், குழந்தையின் அகச்சூழலிலும் எஞ்சிய நேர்மறை விளைவைக் குறைப்பதாகவே உள்ளது. அதேசமயம், நாம் சாதாரணமாகத் தூக்கியெறியும் குப்பைப் பொருட்களின் மிச்ச ஆயுளைக் கண்டறிந்து, அதன்வழி அறிவியலை எளிமைப்படுத்தி குழந்தைகளுக்கு விளக்குகிற இந்த ‘அஹிம்சை பொம்மைகள்’ நிச்சயம் வரலாற்றில் நிலைகொள்பவை.
‘தன்னுடைய கைப்பட ஒரு பொம்மையை உருவாக்கி, அதிலிருந்து ஒரு அறிவியல் விதியை விளக்கி, ஆர்வத்தால் எல்லோரையும் ஈர்க்கும் ஒரு ஆசிரியரை, தன் வாழ்நாள் முழுக்க ஒரு குழந்தை மறக்கவே மறக்காது. காரணம், அவர் பாடம் சொல்லித்தரவில்லை, வாழச் சொல்லித் தந்திருக்கிறார். அத்தகைய ஆசிரியர்களாலும், அவர்களால் உருவாகும் குழந்தைகளாலும்தான் நம்முடைய எதிர்காலம் காப்பாற்றப்படும் என நான் நம்புகிறேன். கனவை விதைப்பது; அதை கைகளால் விளைவிப்பது அதுதான் கல்வியின் இலக்கு’ என குக்கூ காட்டுப்பள்ளி திறப்புநிகழ்வு அன்று, அர்விந்த் குப்தா சொன்ன வார்த்தைகளை இக்கணம் மனம் முழுதிலும் நிறைக்கிறோம்.
Reviews
There are no reviews yet.