Description
தன்னுடைய கருத்துகள்போல் எதிராளியின் கருத்துகளும் முக்கியமானவை என்ற நம்பிக்கை அவர் ரத்தத்தில் ஊறியிருந்தது. உண்மையின் எண்ணிறந்த பரிமாணங்கள். இந்தப் பிரக்ஞை எப்போதும் அவர் மனத்தில் நிறைந்திருக்கும். வாழ்க்கையின் அகண்டத்தை அவர் தன் படிப்பின் மூலம் உணர்ந்திருந்தார். வயது, ஜாதி, மதம்,மொழி, தேசம் இவை தாண்டி ஒரு மனித ஜீவனைத் தன்னையொத்த ஜீவனாகக் காணும் பண்பு அவரிடம் இயற்கையாக இருந்தது.
அவர் மிகப் பெரிய படிப்பாளி. இதில் சிறிதும் சந்தேகமில்லை. சற்றே மிகைப்படுத்தப்பட்டது இந்தப் படிப்பு. அதைக் கழித்துப் பார்த்தாலும் அவரைப்போல் படித்தவர்கள் இந்தியாவிலும் சரி, பிற தேசங்களிலும் சரி, மிகக் குறைவாகவே இருப்பார்கள். அவர் படித்த விதத்தில் புத்தகங்களைப் படிக்கக்கூடாது என்ற திடமான முடிவு கொண்டவன் நான். அதனால் அவர் படித்த படிப்பில் நான் கொள்ளும் ஆச்சரியத்தில் எனக்கு மதிப்புக் குறைவுதான். ஆனால் அவர்மீது என் மதிப்பு படிப்பின் வரையறைகளைப் பற்றி அவர் கொண்டிருந்த உள் பிரக்ஞை சார்ந்தது. இது மிக அபூர்வம்.
தனக்குத் தெரியாத ஒரு விஷயம் எதிராளிக்குத் தெரிந்திருக்கக்கூடும் என்ற உண்மை எப்போதும் அவர் நினைவில் இருந்தது. இளம் வயதில் துள்ளி, வாலிபத்தில் ஆட்டம் போட்டு, முதுமையில் பக்குவம் பெற்றவர் அல்லர் அவர். நான் அவரைப் பார்க்கும்போது – அப்போது அவருக்கு வயது நாற்பத்தைந்து-மிகுந்த பக்குவம் அடைந்தவராகவே இருந்தார். நான் பார்ப்பதற்கு இருபது வருடங்களுக்கு முன் அவருடன் பழகியிருந்தவர்கள், அப்போதும் அடங்கி அறிந்தவராகவே அவர் இருந்தார் என்று என்னிடம் கூறியிருக்கிறார்கள்.
ஞானச்செருக்கு எனும் பாசி அவரிடம் படியவே இல்லை. அவர் மனக்குளத்தில் உலகத்து ஆளுமைகள் சதா குளித்துக்கொண்டிருந்தன. படர, நீரின் நிச்சலனத்துக்குக் காத்துக்கிடந்த பாசி கடைசிவரையிலும் ஏமாந்து போயிருக்கக்கூடும்.
-காற்றில் கலந்த பேரோசை-சுந்தர ராமசாமி

Reviews
There are no reviews yet.