Description
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் திபெத்தில் நிகழ்ந்த சீனாவின் அத்துமீறலைத் தொடர்ந்து இந்தியாவுக்கு வந்தவர் தலாய் லாமா. அன்றுமுதல் வடமாநிலமான இமாசலப்பிரதேசத்தில் தர்மசாலா என்னும் இடத்தில் வசித்துவருகிறார். திபெத்தின் மீதான சீனாவின் மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர அவர் முன்னெடுத்த அகிம்சை வழி செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில் 1989ஆம் ஆண்டில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. புத்தாயிரத்தாண்டு தொடக்கத்தில் அவர் தனது அரசியலதிகாரத்தைத் துறந்துவிட்டு ஜனநாயக முறையிலான தலைமைக்கு வழிவகுத்தார்.
மனிதகுலத்தின் கடமைகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பே மிகமுக்கியமானது என்பது அவருடைய முதன்மையான கருத்து. அவர் குறிப்பிடும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நம் வாழிடங்களைச் சுற்றியுள்ள இயற்கையைப் பாதுகாப்பதை மட்டும் குறிப்பதாக நாம் சுருக்கிப் பார்த்துவிடக் கூடாது. நம்மைச் சுற்றி வாழும் விலங்குகள், பறவையினங்கள், பூச்சியினங்கள் என பிற உயிர்களைப் பாதுகாப்பது கூட நம் கடமை என்பதே அக்கூற்றின் உண்மைப்பொருள்.
‘உள்ளங்களின் உரையாடல்’ என்னும் நூலில் தலாய் லாமா இக்கருத்தைத் தெளிவாக குறிப்பிடுகிறார். நீளமான கட்டுரைகளோ அல்லது உரைகளோ அந்த நூலில் இல்லை. தன் மனத்தில் அவ்வப்போது தோன்றும் எண்ணச் சிதறல்களின் தொகுப்பாகவே அந்த நூலின் அமைப்பு உள்ளது. கவித்துவம் நிறைந்த அந்தச் சின்னச்சின்ன வாக்கியங்கள் படித்த கணத்திலேயே நெஞ்சில் பதிந்துவிடுபவையாக உள்ளன. அந்த வாக்கியத்துக்கு இசைவாக ஒவ்வொரு பக்கத்திலும் வண்ணவண்ண கோட்டோவியங்கள் இடம்பெற்று வாசிப்பின் ஆர்வத்தை அதிகரிக்கின்றன.
–பாவண்ணன்

Reviews
There are no reviews yet.